Saturday 29 January 2011

1999

                    

  கொளுந்துவிட்டெரிந்த இனவாத அடக்குமுறையின் முன் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு மேலைத்தேயங்களுக்கு ஓடிப்போன புலம்பெயர் ஈழத்து இளம்சமுதாயம் இழந்துபோனது சொந்த மண்ணையும் சொந்தங்களையும்  மட்டுமல்ல. நம் கலாச்சார விழுமியங்களையும்தான்.
                          
                    இப்படி புலம்பெயர்ந்து வன்முறையின் வடுக்களோடு வாழும் இளைய சமுதாயத்தப்பற்றிபேசுகிறது  1999.புலம்பெயர் தமிழர்களின் ஒரு முழுமையான திரைப்படைப்பு.

                   சிறுவயது போர்ச்சூழலின் மனப்பாதிப்பு, மேலைத்தேயத்தின் கலாச்சாரத்தாக்கம், உறவுகளின் அரவணைப்பின்மை எல்லாம் ஒரு பகுதி இளைஞர்களை வன்முறைக்கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறது.அன்புகாட்ட உறவுகளில்லாதமயால் எல்லாமே நண்பர்கள் என்றாகிப்போய் அவர்களுக்காக எதையும் செய்யத்துணிகிறது.பொருளாதாரச்சுதந்திரம், போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குகிறது.மயக்கும் போதைப்பொருட்களின் செயற்கை உணர்ச்சியூட்டல், ஏராளமான நண்பர்கள் கூட இருக்கும் தைரியம் எல்லாமே சிறு உரசல்களை தீப்பொறியாக்குகின்றன.சிறு பிரச்சனைகளும் பெரும் குழுச்சண்டைகளாக மாற்றமடைகின்றன.இப்படியான ஒருகுழுவின் சில இளைஞர்களைப்பற்றியதுதான் 1999.

   
                  ஒரு நள்ளிரவில் சில இளைஞர்களுக்குள் ஏற்படும்   வாய்த்தகராறில் ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான்..கொலைசெய்யப்பட்டவன் டொரோண்டோவின் வெஸ்ட்போய்ஸ் எனப்படும் பிரபலமான குழுவின் தலைவன் மரநாய்  என்பவனின் தம்பி. கொன்றவன் இன்னொரு குழுத்தலைவன் குமாரின் தம்பி.
                 
                   பின் குமாரின் குழுவைச்சேர்ந்த அன்பு என்பவனின் பார்வையில் கதை ஆரம்பமாகிறது.  இனவாதஅழிப்பில் தாயைப்பறிகொடுத்த,தந்தையின் அரவணைப்பும் சரவர கிடைக்கப்பெறாத அன்பு நண்பர்களுடன்கூடி அதை மறக்கிறான்.தந்தையிடம் கோபித்துக்கொண்டு செல்லும் அன்பு வழியில் பழைய பள்ளி நண்பன்  அகிலனை  சந்திக்கிறான். இருவருக்கும் இப்போது உறவு அவ்வளவு நன்றாக இல்லை. காரணம் பள்ளித்தோழி கீதாவின்மீது இருவருக்குமே ஏற்படும் இன்னமும் வெளிப்படுத்தப்படாத காதல்.
     
                 அகிலனின் பார்வயிலான காட்சிகள் ஆரம்பமாகிறது.பெற்றோரை இழந்த அகிலன் தாத்தாவுடன் வசிக்கும் பல்கலைக்கழக மாணவன்.சமூகசேவைவில் நாட்டமுடையவன்.விடுமுறை நாட்களில்  வன்னியில் அல்லலுறும் அநாதக்குழந்தைகளுக்காக நிதிதிரட்டும் பணியிலீடுபடுகிறான் . வன்னியில் தான் ஆரம்பிதிருக்கும் அநாதைக்குழந்தைகளுக்கான பணியை விரிவு படுத்துவதும் கீதாவை மணமுடிப்பதுவுமே அவன் கனவு.  கீதாவின் பிறந்ததினமான நாளை அவளிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கிறான்.

   


                  இப்போது குழுத்தலைவன் குமாரின் பார்வையில் படம் தொடங்குகிறது. இனவாதப்போரிலே பெற்றோரை கண்முன்னே பறிகொடுத்து, தம்பி நிமலனுடன் கஸ்டப்பட்டு கனடா வந்து சேர்ந்தவன் குமார். அவனுக்கு தம்பிமேல் உயிர்.  பள்ளியிலே தம்பியை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு, அவனை திருப்பி அடித்துவிட்டுவந்தபின்னர்தான் அவன் வெஸ்ட்போய்ஸ் குழுவை சேர்ந்தவனென்பது தெரியவருகிறது. மிகப்பலமான வெஸ்ட்போய்ஸ் குழுவைச்செர்ந்தவனையே அடித்துவிட்டதால் குமாரின்பின்னும் சிலர்சேர இவனும் ஒரு குழுத்தலைவனாகிவிட்டான்.

                 கோஸ்டிமோதல்கள் உச்சமடைந்தவேளையின் சமூகப்பெரியவர்கள் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தியிருந்தனர். மரநாயின் தம்பியை  நிமலன் கொன்றதனால் நிமலனுக்கு மரநாய்மூலம் ஆபத்து என்று அஞ்சுகிறான்.போலீசும் கைது செய்யலாம் எனும் சூழ்நிலை,

                    தொடர்ந்து அன்பு,அகிலன், குமார் ஆகியோரின் பார்வையூடாக மாறி மாறி காட்சிகள் தொடர்கிறது.

                 தன்னுடைய ஒரே சொந்தமான தம்பி நிமலனை காப்பாற்றத்துடிக்கிறான் குமார். இன்னொரு சகாவான மொட்டையின் ஆலோசனைப்படி இந்தக்கொலையில் அன்புவை சிக்க வைக்கிறான்.

                  அகிலனின் கனவுகள் என்னவானது.....?
               
                  அன்பு கொலைப்பழியிலிருது தப்பித்தானா.....?

                  குமாரால் தம்பியை காப்பாற்ற முடிந்ததா......?

                             இவைதான் மீதிக்கதை. குழுமோதல்களுக்குள் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்களின் கதையை விபரித்திருக்கிறார்கள்.

                           மாறிமாறி மூவரின் பார்வைகளிலிருந்து கதை கூறப்பட்டாலும், எந்தவித சிக்கலுமில்லாமல்  புரியும்படியாக தெளிவான திரைக்கதைக்கு முதலில் பாராட்டுக்கள்.  பகுதி நேரமாக திரைப்படக்கலையை பயின்ற இயக்குனர் லெனின் M சிவம் அழகாக இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே a few good people, strenth, next door  போன்ற குறும்படங்களை இயக்கியதாக தெரிகிறது.  இவரது  a few good people,  independent art film society யின்  சிறந்த குறும்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.மேலும் இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

                      அன்புவாக நடிக்கும் சுதன் மஹாலிங்கமும், குமாராக நடிக்கும் திலீபன்சோமசேகரமும் நல்ல தேர்வு. அகிலனின் தாத்தாவாக ஈழத்தின் பழம்பெரும் கலைஞர் அண்ணே ரைட் புகழ் K.S. பாலச்சந்திரன் சில காட்சிகளில் தோன்றியுள்ளார். மற்றைய நடிகர்களும் கொடுத்த பணியினை செவ்வனே செய்துள்ளனர். திருப்திகரமான ஒளிப்பதிவு. ஒரே காட்சியை ஒவ்வொருவரின் பார்வையில் காட்டும்போதும், வேறுவேறு கோணத்தில் காட்சியமைத்தது அருமை.

                         வான்கூவர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த 10 கனடிய  திரைப்படங்களுக்குள் ஒன்றாக தேர்வுபெற்றிருக்கும்  இத்திரைப்படம் வேறு சில திரைப்படவிழாக்களிலும் தேர்வுபெற்றிருக்கிறது.

                             இத்திரைப்படத்தை எல்லோரையும் ஆதரிப்பதானது, புலம்பெயர் தமிழ்திரைப்படத்துறையை வளர்க்க உறுதுணைபுரியும்.


1 comment:

  1. தங்களின் தரமான இந்த விமர்சனத்திற்க்கு நன்றி. நாம் இதை facebook.com/1999movie இல் இணைத்துள்ளோம். தங்களின் ஆதரவிற்க்கு நன்றி.

    லென்னின் (1999 குழு)
    http://ta.wikipedia.org/wiki/1999_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)

    ReplyDelete