Saturday, 5 May 2012

City of life and death

     
                                                                                              

              போர் எப்போதும், எங்கேயும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. தோல்வியைத்தழுவியவர்களின் இழப்புகளும்,வலிகளும் வெற்றிமமதையில் இருப்பவர்களுக்கு புரிவதேயில்லை.தோல்வியுற்றவர்கள் இனம்,மதம்,நாடு,நகரம் என்று எல்லாவகையிலும எதிரிகளாகவே வெற்றிகொண்டவர்களால்  பார்க்கப்படுவதால் அவர்களின் உச்சபட்ச வெறித்தனம் தோல்வியுற்றவர்கள்மேல் மேற்கொள்ளப்படுகிறது.மனிதநேயம் என்பது மரித்தே போகிறது.  மனிதன் உலகத்திலேயே மிகக்கொடூரமான மிருகம் என்பது அங்கேதான் வெளிப்படுகிறது. அங்கே சட்டத்தின் எந்தப்பக்கங்களும் எட்டிப்பார்ப்பதேயில்லை. அவர்களும் சாட்சியங்களின் சாம்பலைக்கூட மிச்சம்வைப்பதில்லை.

                   முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் இலங்கை அரசுக்கு தோள் கொடுத்ததோடல்லாமல், இன்று அனைத்துலக அரங்கில் இலங்கையை காப்பாற்றத்துடிக்கும் சீனா இரண்டாம் உலக யுத்தத்திலேயே இத்தகையதொரு கொடூரத்திற்கு ஆளானது ஒரு முரணான வரலாறு.
       
               இரண்டாவது சீன-ஜப்பானியப்போரிலே  1937 டிசம்பர் 9 அன்று அப்போதைய சீனத்தலைநகர் நான்கிங் ஜப்பானிய படைகளிடம் வீழ்ச்சியடைந்தபின்னரான ஆறு வாரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஜப்பானியப்படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.  லட்சக்கணக்கான சீன வீரர்களும்,மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப்பின்னணியில் நிகழும் சில கொடூர சம்பவங்களின் தொகுப்புதான்   CITY OF LIFE AND DEATH.
      
                  கதையைத்தெரிந்துகொண்டால் படம் பார்க்கும் சுவாரசியம் கெட்டுவிடுமென்ற எண்ணம்கொண்டோர் உடனே   கீழிறங்கி  டிரையிலருக்கும்  கீழே சென்று வாசித்தல் நலம்.

           
                 வீழ்ச்சியடையும் தறுவாயில் இருக்கும் நான்கிங்கிலிருந்து சீன ராணுவம் வெளியேறுகிறது. அப்போது லூ என்னும் ராணுவ வீரனும் அவனது தோழர்களும் அவர்களை தடுக்க முயன்று தோற்கின்றனர். விமானக்குண்டுவீச்சுக்களாலும், டாங்கிகளாலும் கோட்டைச்சுவர்கள் தகர்க்கப்பட வெற்றிமுழக்கத்துடன் உள்நுழைகிறது ஜப்பானியப்படைகள். கடோகவா என்னும் ஜப்பானிய இளம் வீரனும் அவனது ராணுவ அணியும் ஓடிஒழிந்திருக்கும் சீனவீரர்களை தேடிச்செல்லும்போது லூ மற்றும் தோழர்களால் தாக்கப்படுகிறார்கள். பலத்த இழப்புகளின் மத்தியில் மேலும் பல ராணுவ அணிகளின் வருகையால் லூ மற்றும்தோழர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அவர்களில் பால்யராணுவ வீரன் ச்யாடொவ்சியும் ஒருவன். எல்லோரும் படுகொலை செய்யப்படும்போது ச்யாடொவ்சியும், ஸாவ்வோ என்பவனும் உயிர்தப்புகின்றனர்.

                         அவர்கள்  Dr.ஜோன் ரபி(http://en.wikipedia.org/wiki/John_Rabe) என்னும் ஜெர்மானியராலும் மற்றும் சில மேற்குலகத்தவர்களாலும் நடாத்தப்படும் அகதிகள் பாதுகாப்பு வளையத்தினுள் நுழைகின்றனர்.அடிக்கடி அத்துமீறி நுழையும் ஜப்பானிய படைகளால் பல பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் ஜோன் ரபியின் உதவியாளர் டாங்கின் மைத்துனி மேயும் ஒருத்தி. ஜப்பானிய படைகளிலிருந்து காத்துக்கொள்ள பெண்களெல்லோரும் அலங்கோலமாக முடிவெட்டிக்கொள்ளவும் ஆண்களைப்போல் உடையணியவும் பணிக்கப்படுகின்றனர்.ஜப்பானிய விலைமாதான யுரிகோவை தேடிச்செல்லும் கடோகவா அவள்மேல் காதல்கொள்கிறான்.
             ஜோன்ரபியினது நடவடிக்கைகளால் ஜப்பானிய-ஜெர்மானிய உறவுக்கு குந்தகம்  விளைவதால் அவரை நாடுதிரும்ப ஜெர்மனி உத்தரவிடுகிறது.தனது குடும்பத்தினதும் மற்றயவரது பாதுகாப்புக்காகவும் டாங் பாதுகாப்புப்பகுதியில் ரகசியமாக சிகிச்சைபெறும் காயப்பட்ட சீனவீரர்களை காட்டிக்கொடுக்கிறார்.உள்ளேவரும் ஜப்பானிய ராணுவம் சிகிச்சைபெறுவோரையெல்லாம் சுட்டுக்கொல்கிறது. பெண்கள்மேல் பாலியல்பலாத்காரமும் மேற்கொள்ளப்படுகிறது.டாங்கின் சிறு பெண்ணும் கொல்லப்படுகிறாள்.

               ஜப்பானிய படையினரை மகிழ்விக்க 100 பெண்களை தரும்படி கட்டளையிடுகின்றனர். கண்ணீரோடு ஜோன்ரபி அதை அறிவிக்க விலைமாதான ஸியஜிஆங்கும் டாங்கின் மைத்துனி மேயும் மேலும் சிலரும் மற்றவர்களைக்காப்பதற்காக முன்வருகின்றனர்.  தொடர்ச்சியாக வன்புணர்வினால் பலபெண்கள் உயிரிழக்கின்றனர். மனநிலை பிறழ்ந்த பாடகியாகவேண்டுமென கனவுகொண்டிருந்த மேயும் சுட்டுக்கொல்லப்படுகிறாள்.ஏற்கனவே போரின் கொடூரங்களுக்கெல்லாம் சாட்சியாகவிருக்கும் கடோகவா இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைகி்றான்.

                    Dr.ஜோன்ரபி நகரைவிட்டு வெளியேறும்போது அவரது உதவியாளரான  டாங்கையும் மனைவியையும் அவருடன் செல்ல அநுமதிக்கின்றனர். தன் மனைவியை மட்டும் அநுப்பிவைக்கும் டாங் தனக்குப்பதில் இன்னொரு கைதியை அனுப்பிவைக்கிறார். மேயைக்கண்டுபிடிக்க தான் தங்கியிருப்பதாகச்சொல்லும் டாங் அப்போதுதான் மனைவி மீண்டும் கருவுற்றிருப்பதை அறிகிறார். கொடூர ராணுவ அதிகாரியால் கொலைக்களத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறார் டாங்.

                       யுரிகோவை தேடிச்செல்லும் கடோகவாவிடம் அவள் உயிருடன் திரும்பவில்லையென கூறுகிறாள் அயல்வீட்டுப்பெண். அவள் ஒருபோது தன் மனைவியாயிருந்தவளெனக்கூறும் கடோகவா அவளின் நினைவாலயம் கட்டுமாறு கூறி நிதியளிக்கிறான்.
                    


                      பாதுகாப்பு   வளையத்திலிருந்த  ஆண்கள் வடிகட்டப்பட்டு ஏறக்குறைய எல்லொருமே  கொலைக்களத்திற்கு  கொண்டுசெல்லப்படுவதற்காக டிரக்கில் ஏற்றப்படுகின்றனர்.அவர்களில் ஸாவ்வோவும் ஒருவன். பின் மேற்குலகத்தவரின் வேண்டுகோளையடுத்து ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு ஆண்களை அழைத்துச்செல்ல அநுமதிக்கப்படுகிறது. முகாமில் முன்னின்று உழைத்த இளம் ஆசிரியை ஜியாங் ஒருவரை தன் கணவரெனக்கூறி காப்பாற்றியபின் ஸாவ்வோவை காப்பாற்றச்செல்கிறாள். அவளுடன் ச்சியாடொவ்ஸியும் ஓடுகிறான். இதை கடோகவா நேரிடையாகக்கண்டும் கண்டுகொள்ளாமல் விடுகிறான். ஆனால் இன்னொரு வீரன் காட்டிக்கொடுப்பதால் மூவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பாலியலிக்காக இழுத்துச்செல்லப்படும் ஜியாங் தன்னை சுட்டுவிடும்படி கடோகவாவிடம் இறைஞ்சுகிறாள். மற்றைய ராணுவத்தினர் திகைத்துநிற்க அவளைச்சுட்டுக்கொல்கிறான் கடோகவா.

                               நகருக்கு வெளியே ஸாவ்வோவையும், ச்சியாடெவ்சியையும் கொல்வதற்காக அழைத்துச்செல்கிறான் ஒரு ராணுவவீரன். பின்னால் செல்லும் கடோகவா அவர்களை விடுவித்து போகச்சொல்கிறான். அந்த ராணுவவீரனிடம் சாவைவிட வாழ்க்கை கொடூரமானது என்கிறான். அவனும் ஏற்ருக்கொண்டு திரும்பிச்செல்கிறான். குற்றவுணர்ச்சியோடு கடோகவா தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறான். ச்சியாடெவ்சி இன்னும் உயிருடனிருப்பதாகக்கூறும் டைட்டிலுடம் படம் நிறைவடைகிறது.


                        ஏறக்குறைய சனல் 4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தின் ஒரு முழுநீள திரைவடிவம்தான் இத்திரைப்படம். தூக்கம்வராத இரவொன்றில் தொலைக்காட்சி அலைவரிசைகளை நோண்டியபோது இத்திரைப்படத்தின் இறுதி அரைமணிநேரக்காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனேன். பின் நீண்டநேரத்தேடலுக்குப்பின் யு டியூப்பில் சப்டைட்டில்கள்கூட இல்லாத முன்பகுதி காட்சிகள் கிடைத்தன.
                    கறுப்புவெள்ளையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உறுத்தாத அழகிய ஒளிப்பதிவும், இசையும் அழகியலும் நம்மை இரண்டாம் உலகயுத்த காலத்திற்கே கொண்டுசெல்கிறது.
                இனி நான் இணையத்தில் தேடியெடுத்த சில தகவல்கள்.......
                     திரைக்கதை, இயக்கம் - Lu Chuan
                     ஒளிப்பதிவு - Cao Yu,  He Lei
                     இசை - Liu Tong
                     நடிகர்கள் - Liu Ye, Gao Yuanyuan,Fan Wei, Qin Lan, Nakaizumi Hideo
                     மிகக்கடுமையான சீன தணிக்கைகுழுவினர் இதன்    திரைக்கதைப்பிரதியையே ஆறுமாத ஆய்வுக்குப்பின் ஒப்புக்கொண்டனர்.
                    அக்டோபர் 2007 இல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2009 ஏப்ரலில் சீனாவில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அமெரிக்காவில் மே 2011 இல் வெளியிடப்பட்டது.
                    ஜப்பானியவீரரான கடோகவாவின்மேல் அநுதாபம்கொள்ளவைக்கும் திரைக்கதையினால் சர்ச்சைக்குள்ளானதில் பல திரையரங்குகளில் சில நாட்களிலேயே தூக்கப்பட்டது. இயக்குனருக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
                   சென் செபாஸ்தியன் திரைப்படவிழாவில் கோல்டன் செல் விருதையும், ஒளிப்பதிவிற்கான விருதையும் வென்றது. ஆசியபசுபிக் திரைவிருதிலும், நான்காவது ஆசிய திரைப்படவிழாவிலும் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் விருதினைப்பெற்றுக்கொடுத்தது.மேலும் சில விருதுகளை சர்வதேச அளவில் பெற்றுக்கொண்டதோடு 2009 ஓஸ்லோ திரைப்படவிழாவில் விஸுவல் எபக்டுக்கான விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்டது.

                      நான் முன்பே ஒருபதிவில் கூறியபடி உலகப்படங்களையெல்லாம் வெகுநுட்பமாக விமர்சிக்குமளவு நா்ன் ஒன்றும் அப்பாடக்கர் ஆசாமி கிடையாது. பள்ளிப்படிப்பைக்கூட பூர்த்திசெய்யாத ஒரு சாதாரண கிராமத்துமனிதன். ஐரோப்பிய அகதிவாழ்க்கை உலகைப்பற்றிய ஒரு பார்வையைக்கொடுத்தது. பதிவுலகம் உலகசினிமாவை அறிமுகம் செய்தது. என்னைச்சூழவுள்ளோர் எல்லோரும் கோடம்பாக்கத்து ரசிகர்கள் மட்டுமே. என்னைப்பாதித்த உலகசினிமாக்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றே  அவ்வப்போது எழுதுகிறேன். என் குறைநிறைகளை சுட்டிக்காட்டி நீங்கள் கொடுக்கும் ஆதரவே அவ்வப்போதேனும் தொடர்ந்து எழுதத்தூண்டும். நன்றி...வணக்கம்.