Saturday 29 January 2011

1999

                    

  கொளுந்துவிட்டெரிந்த இனவாத அடக்குமுறையின் முன் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு மேலைத்தேயங்களுக்கு ஓடிப்போன புலம்பெயர் ஈழத்து இளம்சமுதாயம் இழந்துபோனது சொந்த மண்ணையும் சொந்தங்களையும்  மட்டுமல்ல. நம் கலாச்சார விழுமியங்களையும்தான்.
                          
                    இப்படி புலம்பெயர்ந்து வன்முறையின் வடுக்களோடு வாழும் இளைய சமுதாயத்தப்பற்றிபேசுகிறது  1999.புலம்பெயர் தமிழர்களின் ஒரு முழுமையான திரைப்படைப்பு.

                   சிறுவயது போர்ச்சூழலின் மனப்பாதிப்பு, மேலைத்தேயத்தின் கலாச்சாரத்தாக்கம், உறவுகளின் அரவணைப்பின்மை எல்லாம் ஒரு பகுதி இளைஞர்களை வன்முறைக்கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறது.அன்புகாட்ட உறவுகளில்லாதமயால் எல்லாமே நண்பர்கள் என்றாகிப்போய் அவர்களுக்காக எதையும் செய்யத்துணிகிறது.பொருளாதாரச்சுதந்திரம், போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குகிறது.மயக்கும் போதைப்பொருட்களின் செயற்கை உணர்ச்சியூட்டல், ஏராளமான நண்பர்கள் கூட இருக்கும் தைரியம் எல்லாமே சிறு உரசல்களை தீப்பொறியாக்குகின்றன.சிறு பிரச்சனைகளும் பெரும் குழுச்சண்டைகளாக மாற்றமடைகின்றன.இப்படியான ஒருகுழுவின் சில இளைஞர்களைப்பற்றியதுதான் 1999.

   
                  ஒரு நள்ளிரவில் சில இளைஞர்களுக்குள் ஏற்படும்   வாய்த்தகராறில் ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான்..கொலைசெய்யப்பட்டவன் டொரோண்டோவின் வெஸ்ட்போய்ஸ் எனப்படும் பிரபலமான குழுவின் தலைவன் மரநாய்  என்பவனின் தம்பி. கொன்றவன் இன்னொரு குழுத்தலைவன் குமாரின் தம்பி.
                 
                   பின் குமாரின் குழுவைச்சேர்ந்த அன்பு என்பவனின் பார்வையில் கதை ஆரம்பமாகிறது.  இனவாதஅழிப்பில் தாயைப்பறிகொடுத்த,தந்தையின் அரவணைப்பும் சரவர கிடைக்கப்பெறாத அன்பு நண்பர்களுடன்கூடி அதை மறக்கிறான்.தந்தையிடம் கோபித்துக்கொண்டு செல்லும் அன்பு வழியில் பழைய பள்ளி நண்பன்  அகிலனை  சந்திக்கிறான். இருவருக்கும் இப்போது உறவு அவ்வளவு நன்றாக இல்லை. காரணம் பள்ளித்தோழி கீதாவின்மீது இருவருக்குமே ஏற்படும் இன்னமும் வெளிப்படுத்தப்படாத காதல்.
     
                 அகிலனின் பார்வயிலான காட்சிகள் ஆரம்பமாகிறது.பெற்றோரை இழந்த அகிலன் தாத்தாவுடன் வசிக்கும் பல்கலைக்கழக மாணவன்.சமூகசேவைவில் நாட்டமுடையவன்.விடுமுறை நாட்களில்  வன்னியில் அல்லலுறும் அநாதக்குழந்தைகளுக்காக நிதிதிரட்டும் பணியிலீடுபடுகிறான் . வன்னியில் தான் ஆரம்பிதிருக்கும் அநாதைக்குழந்தைகளுக்கான பணியை விரிவு படுத்துவதும் கீதாவை மணமுடிப்பதுவுமே அவன் கனவு.  கீதாவின் பிறந்ததினமான நாளை அவளிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கிறான்.

   


                  இப்போது குழுத்தலைவன் குமாரின் பார்வையில் படம் தொடங்குகிறது. இனவாதப்போரிலே பெற்றோரை கண்முன்னே பறிகொடுத்து, தம்பி நிமலனுடன் கஸ்டப்பட்டு கனடா வந்து சேர்ந்தவன் குமார். அவனுக்கு தம்பிமேல் உயிர்.  பள்ளியிலே தம்பியை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு, அவனை திருப்பி அடித்துவிட்டுவந்தபின்னர்தான் அவன் வெஸ்ட்போய்ஸ் குழுவை சேர்ந்தவனென்பது தெரியவருகிறது. மிகப்பலமான வெஸ்ட்போய்ஸ் குழுவைச்செர்ந்தவனையே அடித்துவிட்டதால் குமாரின்பின்னும் சிலர்சேர இவனும் ஒரு குழுத்தலைவனாகிவிட்டான்.

                 கோஸ்டிமோதல்கள் உச்சமடைந்தவேளையின் சமூகப்பெரியவர்கள் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தியிருந்தனர். மரநாயின் தம்பியை  நிமலன் கொன்றதனால் நிமலனுக்கு மரநாய்மூலம் ஆபத்து என்று அஞ்சுகிறான்.போலீசும் கைது செய்யலாம் எனும் சூழ்நிலை,

                    தொடர்ந்து அன்பு,அகிலன், குமார் ஆகியோரின் பார்வையூடாக மாறி மாறி காட்சிகள் தொடர்கிறது.

                 தன்னுடைய ஒரே சொந்தமான தம்பி நிமலனை காப்பாற்றத்துடிக்கிறான் குமார். இன்னொரு சகாவான மொட்டையின் ஆலோசனைப்படி இந்தக்கொலையில் அன்புவை சிக்க வைக்கிறான்.

                  அகிலனின் கனவுகள் என்னவானது.....?
               
                  அன்பு கொலைப்பழியிலிருது தப்பித்தானா.....?

                  குமாரால் தம்பியை காப்பாற்ற முடிந்ததா......?

                             இவைதான் மீதிக்கதை. குழுமோதல்களுக்குள் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்களின் கதையை விபரித்திருக்கிறார்கள்.

                           மாறிமாறி மூவரின் பார்வைகளிலிருந்து கதை கூறப்பட்டாலும், எந்தவித சிக்கலுமில்லாமல்  புரியும்படியாக தெளிவான திரைக்கதைக்கு முதலில் பாராட்டுக்கள்.  பகுதி நேரமாக திரைப்படக்கலையை பயின்ற இயக்குனர் லெனின் M சிவம் அழகாக இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே a few good people, strenth, next door  போன்ற குறும்படங்களை இயக்கியதாக தெரிகிறது.  இவரது  a few good people,  independent art film society யின்  சிறந்த குறும்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.மேலும் இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

                      அன்புவாக நடிக்கும் சுதன் மஹாலிங்கமும், குமாராக நடிக்கும் திலீபன்சோமசேகரமும் நல்ல தேர்வு. அகிலனின் தாத்தாவாக ஈழத்தின் பழம்பெரும் கலைஞர் அண்ணே ரைட் புகழ் K.S. பாலச்சந்திரன் சில காட்சிகளில் தோன்றியுள்ளார். மற்றைய நடிகர்களும் கொடுத்த பணியினை செவ்வனே செய்துள்ளனர். திருப்திகரமான ஒளிப்பதிவு. ஒரே காட்சியை ஒவ்வொருவரின் பார்வையில் காட்டும்போதும், வேறுவேறு கோணத்தில் காட்சியமைத்தது அருமை.

                         வான்கூவர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த 10 கனடிய  திரைப்படங்களுக்குள் ஒன்றாக தேர்வுபெற்றிருக்கும்  இத்திரைப்படம் வேறு சில திரைப்படவிழாக்களிலும் தேர்வுபெற்றிருக்கிறது.

                             இத்திரைப்படத்தை எல்லோரையும் ஆதரிப்பதானது, புலம்பெயர் தமிழ்திரைப்படத்துறையை வளர்க்க உறுதுணைபுரியும்.


Saturday 15 January 2011

பணம் விளையாடும் விளையாட்டு...

                   அடுத்த தவணை பணவேட்டையில் இறங்கிவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அடுத்த மூண்றாண்டுகளுக்கான  IBL  அணிகளுக்கான வீரர்கள் ஏலம் விடப்பட்டிருக்கிறார்கள்.

                      இரவுபகல் பாராது வெறியோடு கிரிக்கெட் பார்த்தது ஒரு காலம். சென்னை சேப்பாக்கத்தில் ஒரேஒரு முறை மாமாவுடன் சென்று சர்வதேச கிரிகெட் பார்த்திருக்கிறேன். டிக்கெட் கிடைக்காமல் சுவரேறி குதித்து உள்ளே சென்றபோது சுவரில் பதித்திருந்த கண்ணாடி கையை கிழித்துவிட, ரத்தம் வழிந்தோடிய கையோடு கிரிக்கெட் பார்த்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது.

                    பின்னர்  இங்கிலாந்து வந்தபின் பணிச்சுமை காரணமாகவும் ,   விளையாட்டுக்களை  ஒளிபரப்பும்கட்டண
 தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கு  பணச்சுமை காரணமாகவும் கிரிக்கெட் பார்ப்பதில் இடைவெளி விழுந்துவிட்டது. பின் கிளம்பியது கிரிக்கெட் ஊழல் புகார், வீரர்கள் பணத்துக்காக பந்தயக்காரர்களின் எண்ணத்துக்கு ஆடுவதாக கூறப்பட்டது. நான் ரசித்த திறமையான கேப்டன்கள் குரேஞ்சே, அசாருதீன் போன்றோர் கு்ற்றச்சாட்டு நிரூபணமானதில் கிரிக்கெட் உலகிலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர். பின்னர் ஒரு விமானவிபத்தில் குரெஞ்சே இறந்துபோனது இன்னொரு சோகம்.
               
                   இந்த இடைவெளியும் ஊழல்புகாரும் கிரிக்கெட் மீதான நாட்டத்தை வெகுவாக குறைத்துவிட்டது. இப்போதெல்லாம் கிரிக்கெட்டை முழுமையாக உட்கார்ந்து ரசிக்க முடிவதில்லை.  இதற்கு இன்னொரு காரணம் ஒரு நாளின் பாதிநேரத்தையும் கிரிக்கெட் விழுங்கிவிடுகிறது.ஆகவே ஸ்கோர்களை மட்டும் தெரிந்துகொள்வதோடு சரி.
          இருபதிற்கு இருபது அறிமுகப்படுத்தப்பட்டபின், சில மணி நேரத்தில் முடிந்துவிட்டதால் சிறிது ஆர்வமாகப் பார்க்க முடிகிறது.
          
           IBL   ஏலத்தில் கௌதம்காம்பீர் அதிகபட்சமாக 11.04 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார்.ரோஹித்சர்மா 9.2 கோடிக்கும், இர்பான்பதான் 8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் 8.28 கோடிக்கும் ஏலம் போயிருக்கிறார்கள். கங்குலி, க்ரிஸ்கெய்ல், லாரா, சனத் ஜெயசூர்யா போன்ற பழம்பெரும் தலைகளை ஏலம் எடுக்க யாருமில்லை. அதே நேரம் புதிய வீரர்கள் சிலர் ஆர்வமாக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

            கடந்த உலகக்கோப்பைத் தொடரில மோசமான   தோல்வியைத் தழுவிய இந்திய அணி  மிக முன்னைய சுற்றுக்களிலேயே வெளியேற, புதிய இளம்வீரர்களை  வளர்த்தெடுக்கும்  நோக்கில் ZEE தொலைக்காட்சியுடன் கபில்தேவ் இணைந்து உருவாக்கியது இந்தியன் கிரிக்கெட் லீக் எனப்படும் ICL .  பணத்தை கொட்டிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் இதுவென்று கண்டுகொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் போட்டியாக IBL  ஐ அறிமுகப்படுத்தியதும், தன்  அதிகாரபலத்தால் சர்வதேச வீரர்களை  ICL  இல் விளையாட விடாமல் தடுத்ததும் யாவரும் அறிந்தவிடயம். மீறி விளையாடிய சில வீரர்கள் சர்வதேச போட்டிகளீல் விளையாட தடை விதிக்கப்பட்டது. இறுதியில்,  இளம் வீரர்களை உருவாக்கவென்று  ஏற்படுத்தப்பட்ட ஒரு போட்டி, சில வீரர்களின் சர்வதேச விளையாட்டுக்கு ஆப்பாக மாறியது.    ஆனால்   இந்திய கிரிகெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கோடிகளை கொட்டிக்கொடுதுக்கொண்டுள்ளது. இப்போது IBL  நிர்வாகத்துறையிலும் ஊழல்புகார், விசாரணை என்றிருக்கும் நிலையில்,  கிரிக்கெட் என்றாலே பணம்தான் எங்கேயும் விளையாடுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

Sunday 9 January 2011

தமிழகத்துக்கு வெளியேயான தமிழ்த்திரைப்படத்தயாரிப்புகள்..

   
 தமிழகத்திற்கு வெளியே தமிழ்திரைப்படத்தயாரிப்பு என்பது பெரும்பாலும் குறும்படங்களுடனேயே முடிந்து விடுகிறது. ஈழப்போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்திற்குமுன்னர் இலங்கையில் நான் உங்கள் தோழன்,வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற சில திரைப்படங்களை மிகச்சிறு வயதில் பார்த்த ஞாபகம் இருந்தாலும் இப்போது பெயர்கள் மட்டுமே நினைவிலிருக்கின்றன.இணையத்தின் உதவியுடன் இப்போது தேடும்போது 1962 இல் வெளியான சமுதாயம் எனும் திரைப்படம் முதல் 2010 இல் வெளிநாடுகளில் வெளியான எல்லாளன் வரைசுமார் முப்பது திரைப்படங்கள் அங்கு தயாரிக்கப்பட்டது தெரியவருகிறது,

 போராட்டத்தின் தீவிரகாலத்தில் பல குறும்படங்கள் விடுதலப்புலிகளின் கலைபண்பாட்டுப்பிரிவினரால் தயாரிக்கப்பட்டன. வீடியோக்கருவிகளின்மூலம் மிகக்குறைந்த வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட அப்படங்கள் தாய்மண்ணின் துன்பதுயரங்களையும் போராளிகளின் தீரத்தையும் ஈகத்தையும் தமிழ்மண்ணின் விடிதலையின் தேவையையும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தன.

         மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்ந்திருந்தும் முன்னர்  யாருமே திரைப்படதயாரிப்புக்கு முயன்றதாக தெளிவாகத்தெரியாவிட்டாலும் இப்போது அநுஸ்தானம்,காதல் வேண்டும் போன்ற திரைப்படங்கள் தயாரிப்பிலிருப்பதாகத்தெரிகின்றது.

        போரின்காரணமாக ஐரோப்பா,கனடா போன்ற மேலைத்தேய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ச்சமூகமும் தன் கலைத்தாகத்தை குறும்படங்கள்மூலமே தீர்த்துக்கொண்டது. ஒரு சில முழுநீழத்திரைப்பட முயற்சிகளும் பெரிதாக வெற்றியளிக்கவில்லை.ஆனாலும் அவர்களின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை.இவற்றில் புலம்பெயர் தமிழர் புதியவனின் மண் குறிப்பிடத்தகுந்தது.ஆனாலும் அது இலங்கையிலேயே பெரும்பாலும் படமாக்கப்பட்டதால் இலங்கைத்தமிழ்பட பட்டியலுக்குள்ளேயே அடங்குகிறது.

.Mann


 ஒருசிலர் கோடம்பாக்கத்துக்கே சென்று திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டு மிகச்சிரமப்பட்டு உழைத்த பணத்தையும் இழந்து ஓட்டாண்டயாகினர்.ஐரோப்பாவில் திரப்படவினியோகத்தை தொழிலாகக்கொண்ட ஐங்கரன் இண்டர்னேசனல் நிறுவனம் மட்டுமே அவர்களின் வினியோகத்தொடர்புகள் காரணமாக அத்தொழிலில் வெற்றிகொள்ளமுடிந்தது.புத்தரின் பெயரால் எனும்திரைப்படம் இங்கிலாந்துவாழ்  ஈழத்தமிழர்களின்  ஒரு மலையாள நண்பரால் பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

       ஈழத்தவரான பாலுமகேந்திரா இளவயதிலேயே கோடம்பாக்கத்துக்கு குடிபெயர்ந்து தன்னுடைய தன்னிகரற்ற திறமையினால் தமிழ்த்திரையுலகில் என்றென்றுமே குறிப்பிடத்தகுந்த ஒரு மிகமுக்கிய இயக்கினராகினார்.அவரின் திரைப்படங்கள் இந்திய தேசிய  விருதுகளைக்கூட வென்றிருக்கின்றன.


     
           
        போர்நிறுத்தகாலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த இயக்குனர்களான மகேந்திரன்,பாரதிராஜா போன்றோர் ஈழமண்ணுக்கு வருகை தந்தனர்.அவர்களின் வருகையின்பின் மகேந்திரனின் மகன் ஜானின் இயக்கத்தில் ஈழத்தின் முதலாவது முழுநீளத்திரப்படம் ஆணிவேர் தயாரிக்கப்பட்டது.அதில் பல தென்னிந்திய கலைஞர்களின் பங்கிருந்தது. தமிழகத்தின் நந்தா,மதுமிதா,நீலிமாராணி போன்றோர் நடித்திருந்தனர்.இதில் கிடைத்த அளவற்ற அநுபவத்தின் காரணமாக முற்றுமுழுதாக ஈழமண்ணின் கலைஞர்களினால் எல்லாளன் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக இவை தொடருமுன் ஈழமண் ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டது.

       கனடாவில் தயாரிக்கப்பட்ட 1999  என்னும் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது.வீடியோவில் படமாக்கப்பட்டதுபோல் தோன்றினாலும்  தெளிவான திரைக்கதையுடன் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்.


 

 
        மேலே பதிவிட்டிருக்கும் பட்டியல் நான் அறிந்தவை மட்டுமே.1999 படத்தைப்பற்றி எழுதுவதற்காகவே மேலே குறிப்பிட்டவற்றை எழுத ஆரம்பித்தேன். மிகவிரைவில் 1999 இனைப்பற்றி  இன்னொரு பதிவிடுகிறேன்.