Thursday 9 August 2012

லண்டன் 2012


                                இதை எழுத ஆரம்பிக்கும்போது உசைன் போல்ட் 200 m இற்கு தயாராகி இதோ சரித்திரப்புகழ்பெற்ற அந்த வெற்றியையும் பெற்றுவிட்டார். சற்றுநேரம் முன்னால் ஒருவர் அணிந்திருந்த  T-shirtடில் Only think you can do within 10 secconds is read this- ushain bolt என்றிருந்தது. நமக்கிருக்கிற ஆங்கில அறிவிற்கு இதை வாசிப்பதற்கு அதற்கு மேலேயே ஆகிவிட்டது. அதை புரிந்துகொள்வதற்கு இன்னும் நேரமெடுத்தது. இந்த ஒலிம்பிக்கைபற்றி எனக்கு இரண்டு டிக்கற்றுகள் கிடைத்தவுடனேயே தம்பட்டமடித்து எழுதவேண்டுமென்று நினைத்தேன்.வழக்கம்போல் சோம்பல்தனம்.நமக்கு இப்படிப்பட்ட சரித்திர சாதனைகளை பார்க்கும்போதே புல்லரிக்கிறதே, அதை நிகழ்த்துபவர்களுக்கு எப்படியிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது..
                 நமக்கு நினைவு தெரிந்த நாள்முதல் கிரிக்கெட்டைவிட்டால் நாதியில்லை. ஒழுங்காக போய்க்கொண்டிருந்த அதக்கூட இப்போ ஐ பி எல் ஆரம்பித்து வியாபாரமாக்கிவிட்டார்கள்


                 ஒலிம்பிக்கில் நெதர்லாந்துடனான இரட்டையர் ஆட்டத்தின்முன்னால் மகேஸ்பூபதி, போபண்ணா ஜோடியின் பயிற்சி..
               

லியாண்டர் பயஸ்,வரதா ஜோடி....,
                    

Denmamark,s. wozniacki-belgium, wckimayor



ஒலிம்பிக் உதைப்பந்தாட்டத்தில் பிரித்தானிய, பிரேசில் மகளிர் அணிகள்....


இவையனைத்தும் என் மொபைலில் சுட்டது....என் வாழ்வின் உன்னதமான தருணங்கள் இவை..இவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த மொக்கைப்பதிவு....

Saturday 5 May 2012

City of life and death

     
                                                                                              

              போர் எப்போதும், எங்கேயும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. தோல்வியைத்தழுவியவர்களின் இழப்புகளும்,வலிகளும் வெற்றிமமதையில் இருப்பவர்களுக்கு புரிவதேயில்லை.தோல்வியுற்றவர்கள் இனம்,மதம்,நாடு,நகரம் என்று எல்லாவகையிலும எதிரிகளாகவே வெற்றிகொண்டவர்களால்  பார்க்கப்படுவதால் அவர்களின் உச்சபட்ச வெறித்தனம் தோல்வியுற்றவர்கள்மேல் மேற்கொள்ளப்படுகிறது.மனிதநேயம் என்பது மரித்தே போகிறது.  மனிதன் உலகத்திலேயே மிகக்கொடூரமான மிருகம் என்பது அங்கேதான் வெளிப்படுகிறது. அங்கே சட்டத்தின் எந்தப்பக்கங்களும் எட்டிப்பார்ப்பதேயில்லை. அவர்களும் சாட்சியங்களின் சாம்பலைக்கூட மிச்சம்வைப்பதில்லை.

                   முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் இலங்கை அரசுக்கு தோள் கொடுத்ததோடல்லாமல், இன்று அனைத்துலக அரங்கில் இலங்கையை காப்பாற்றத்துடிக்கும் சீனா இரண்டாம் உலக யுத்தத்திலேயே இத்தகையதொரு கொடூரத்திற்கு ஆளானது ஒரு முரணான வரலாறு.
       
               இரண்டாவது சீன-ஜப்பானியப்போரிலே  1937 டிசம்பர் 9 அன்று அப்போதைய சீனத்தலைநகர் நான்கிங் ஜப்பானிய படைகளிடம் வீழ்ச்சியடைந்தபின்னரான ஆறு வாரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஜப்பானியப்படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.  லட்சக்கணக்கான சீன வீரர்களும்,மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப்பின்னணியில் நிகழும் சில கொடூர சம்பவங்களின் தொகுப்புதான்   CITY OF LIFE AND DEATH.
      
                  கதையைத்தெரிந்துகொண்டால் படம் பார்க்கும் சுவாரசியம் கெட்டுவிடுமென்ற எண்ணம்கொண்டோர் உடனே   கீழிறங்கி  டிரையிலருக்கும்  கீழே சென்று வாசித்தல் நலம்.

           
                 வீழ்ச்சியடையும் தறுவாயில் இருக்கும் நான்கிங்கிலிருந்து சீன ராணுவம் வெளியேறுகிறது. அப்போது லூ என்னும் ராணுவ வீரனும் அவனது தோழர்களும் அவர்களை தடுக்க முயன்று தோற்கின்றனர். விமானக்குண்டுவீச்சுக்களாலும், டாங்கிகளாலும் கோட்டைச்சுவர்கள் தகர்க்கப்பட வெற்றிமுழக்கத்துடன் உள்நுழைகிறது ஜப்பானியப்படைகள். கடோகவா என்னும் ஜப்பானிய இளம் வீரனும் அவனது ராணுவ அணியும் ஓடிஒழிந்திருக்கும் சீனவீரர்களை தேடிச்செல்லும்போது லூ மற்றும் தோழர்களால் தாக்கப்படுகிறார்கள். பலத்த இழப்புகளின் மத்தியில் மேலும் பல ராணுவ அணிகளின் வருகையால் லூ மற்றும்தோழர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அவர்களில் பால்யராணுவ வீரன் ச்யாடொவ்சியும் ஒருவன். எல்லோரும் படுகொலை செய்யப்படும்போது ச்யாடொவ்சியும், ஸாவ்வோ என்பவனும் உயிர்தப்புகின்றனர்.

                         அவர்கள்  Dr.ஜோன் ரபி(http://en.wikipedia.org/wiki/John_Rabe) என்னும் ஜெர்மானியராலும் மற்றும் சில மேற்குலகத்தவர்களாலும் நடாத்தப்படும் அகதிகள் பாதுகாப்பு வளையத்தினுள் நுழைகின்றனர்.அடிக்கடி அத்துமீறி நுழையும் ஜப்பானிய படைகளால் பல பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் ஜோன் ரபியின் உதவியாளர் டாங்கின் மைத்துனி மேயும் ஒருத்தி. ஜப்பானிய படைகளிலிருந்து காத்துக்கொள்ள பெண்களெல்லோரும் அலங்கோலமாக முடிவெட்டிக்கொள்ளவும் ஆண்களைப்போல் உடையணியவும் பணிக்கப்படுகின்றனர்.ஜப்பானிய விலைமாதான யுரிகோவை தேடிச்செல்லும் கடோகவா அவள்மேல் காதல்கொள்கிறான்.
             ஜோன்ரபியினது நடவடிக்கைகளால் ஜப்பானிய-ஜெர்மானிய உறவுக்கு குந்தகம்  விளைவதால் அவரை நாடுதிரும்ப ஜெர்மனி உத்தரவிடுகிறது.தனது குடும்பத்தினதும் மற்றயவரது பாதுகாப்புக்காகவும் டாங் பாதுகாப்புப்பகுதியில் ரகசியமாக சிகிச்சைபெறும் காயப்பட்ட சீனவீரர்களை காட்டிக்கொடுக்கிறார்.உள்ளேவரும் ஜப்பானிய ராணுவம் சிகிச்சைபெறுவோரையெல்லாம் சுட்டுக்கொல்கிறது. பெண்கள்மேல் பாலியல்பலாத்காரமும் மேற்கொள்ளப்படுகிறது.டாங்கின் சிறு பெண்ணும் கொல்லப்படுகிறாள்.

               ஜப்பானிய படையினரை மகிழ்விக்க 100 பெண்களை தரும்படி கட்டளையிடுகின்றனர். கண்ணீரோடு ஜோன்ரபி அதை அறிவிக்க விலைமாதான ஸியஜிஆங்கும் டாங்கின் மைத்துனி மேயும் மேலும் சிலரும் மற்றவர்களைக்காப்பதற்காக முன்வருகின்றனர்.  தொடர்ச்சியாக வன்புணர்வினால் பலபெண்கள் உயிரிழக்கின்றனர். மனநிலை பிறழ்ந்த பாடகியாகவேண்டுமென கனவுகொண்டிருந்த மேயும் சுட்டுக்கொல்லப்படுகிறாள்.ஏற்கனவே போரின் கொடூரங்களுக்கெல்லாம் சாட்சியாகவிருக்கும் கடோகவா இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைகி்றான்.

                    Dr.ஜோன்ரபி நகரைவிட்டு வெளியேறும்போது அவரது உதவியாளரான  டாங்கையும் மனைவியையும் அவருடன் செல்ல அநுமதிக்கின்றனர். தன் மனைவியை மட்டும் அநுப்பிவைக்கும் டாங் தனக்குப்பதில் இன்னொரு கைதியை அனுப்பிவைக்கிறார். மேயைக்கண்டுபிடிக்க தான் தங்கியிருப்பதாகச்சொல்லும் டாங் அப்போதுதான் மனைவி மீண்டும் கருவுற்றிருப்பதை அறிகிறார். கொடூர ராணுவ அதிகாரியால் கொலைக்களத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறார் டாங்.

                       யுரிகோவை தேடிச்செல்லும் கடோகவாவிடம் அவள் உயிருடன் திரும்பவில்லையென கூறுகிறாள் அயல்வீட்டுப்பெண். அவள் ஒருபோது தன் மனைவியாயிருந்தவளெனக்கூறும் கடோகவா அவளின் நினைவாலயம் கட்டுமாறு கூறி நிதியளிக்கிறான்.
                    


                      பாதுகாப்பு   வளையத்திலிருந்த  ஆண்கள் வடிகட்டப்பட்டு ஏறக்குறைய எல்லொருமே  கொலைக்களத்திற்கு  கொண்டுசெல்லப்படுவதற்காக டிரக்கில் ஏற்றப்படுகின்றனர்.அவர்களில் ஸாவ்வோவும் ஒருவன். பின் மேற்குலகத்தவரின் வேண்டுகோளையடுத்து ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு ஆண்களை அழைத்துச்செல்ல அநுமதிக்கப்படுகிறது. முகாமில் முன்னின்று உழைத்த இளம் ஆசிரியை ஜியாங் ஒருவரை தன் கணவரெனக்கூறி காப்பாற்றியபின் ஸாவ்வோவை காப்பாற்றச்செல்கிறாள். அவளுடன் ச்சியாடொவ்ஸியும் ஓடுகிறான். இதை கடோகவா நேரிடையாகக்கண்டும் கண்டுகொள்ளாமல் விடுகிறான். ஆனால் இன்னொரு வீரன் காட்டிக்கொடுப்பதால் மூவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பாலியலிக்காக இழுத்துச்செல்லப்படும் ஜியாங் தன்னை சுட்டுவிடும்படி கடோகவாவிடம் இறைஞ்சுகிறாள். மற்றைய ராணுவத்தினர் திகைத்துநிற்க அவளைச்சுட்டுக்கொல்கிறான் கடோகவா.

                               நகருக்கு வெளியே ஸாவ்வோவையும், ச்சியாடெவ்சியையும் கொல்வதற்காக அழைத்துச்செல்கிறான் ஒரு ராணுவவீரன். பின்னால் செல்லும் கடோகவா அவர்களை விடுவித்து போகச்சொல்கிறான். அந்த ராணுவவீரனிடம் சாவைவிட வாழ்க்கை கொடூரமானது என்கிறான். அவனும் ஏற்ருக்கொண்டு திரும்பிச்செல்கிறான். குற்றவுணர்ச்சியோடு கடோகவா தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறான். ச்சியாடெவ்சி இன்னும் உயிருடனிருப்பதாகக்கூறும் டைட்டிலுடம் படம் நிறைவடைகிறது.


                        ஏறக்குறைய சனல் 4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தின் ஒரு முழுநீள திரைவடிவம்தான் இத்திரைப்படம். தூக்கம்வராத இரவொன்றில் தொலைக்காட்சி அலைவரிசைகளை நோண்டியபோது இத்திரைப்படத்தின் இறுதி அரைமணிநேரக்காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனேன். பின் நீண்டநேரத்தேடலுக்குப்பின் யு டியூப்பில் சப்டைட்டில்கள்கூட இல்லாத முன்பகுதி காட்சிகள் கிடைத்தன.
                    கறுப்புவெள்ளையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உறுத்தாத அழகிய ஒளிப்பதிவும், இசையும் அழகியலும் நம்மை இரண்டாம் உலகயுத்த காலத்திற்கே கொண்டுசெல்கிறது.
                இனி நான் இணையத்தில் தேடியெடுத்த சில தகவல்கள்.......
                     திரைக்கதை, இயக்கம் - Lu Chuan
                     ஒளிப்பதிவு - Cao Yu,  He Lei
                     இசை - Liu Tong
                     நடிகர்கள் - Liu Ye, Gao Yuanyuan,Fan Wei, Qin Lan, Nakaizumi Hideo
                     மிகக்கடுமையான சீன தணிக்கைகுழுவினர் இதன்    திரைக்கதைப்பிரதியையே ஆறுமாத ஆய்வுக்குப்பின் ஒப்புக்கொண்டனர்.
                    அக்டோபர் 2007 இல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2009 ஏப்ரலில் சீனாவில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அமெரிக்காவில் மே 2011 இல் வெளியிடப்பட்டது.
                    ஜப்பானியவீரரான கடோகவாவின்மேல் அநுதாபம்கொள்ளவைக்கும் திரைக்கதையினால் சர்ச்சைக்குள்ளானதில் பல திரையரங்குகளில் சில நாட்களிலேயே தூக்கப்பட்டது. இயக்குனருக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
                   சென் செபாஸ்தியன் திரைப்படவிழாவில் கோல்டன் செல் விருதையும், ஒளிப்பதிவிற்கான விருதையும் வென்றது. ஆசியபசுபிக் திரைவிருதிலும், நான்காவது ஆசிய திரைப்படவிழாவிலும் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் விருதினைப்பெற்றுக்கொடுத்தது.மேலும் சில விருதுகளை சர்வதேச அளவில் பெற்றுக்கொண்டதோடு 2009 ஓஸ்லோ திரைப்படவிழாவில் விஸுவல் எபக்டுக்கான விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்டது.

                      நான் முன்பே ஒருபதிவில் கூறியபடி உலகப்படங்களையெல்லாம் வெகுநுட்பமாக விமர்சிக்குமளவு நா்ன் ஒன்றும் அப்பாடக்கர் ஆசாமி கிடையாது. பள்ளிப்படிப்பைக்கூட பூர்த்திசெய்யாத ஒரு சாதாரண கிராமத்துமனிதன். ஐரோப்பிய அகதிவாழ்க்கை உலகைப்பற்றிய ஒரு பார்வையைக்கொடுத்தது. பதிவுலகம் உலகசினிமாவை அறிமுகம் செய்தது. என்னைச்சூழவுள்ளோர் எல்லோரும் கோடம்பாக்கத்து ரசிகர்கள் மட்டுமே. என்னைப்பாதித்த உலகசினிமாக்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றே  அவ்வப்போது எழுதுகிறேன். என் குறைநிறைகளை சுட்டிக்காட்டி நீங்கள் கொடுக்கும் ஆதரவே அவ்வப்போதேனும் தொடர்ந்து எழுதத்தூண்டும். நன்றி...வணக்கம்.

Friday 9 December 2011

தி ரிட்டர்ன் - ரஸ்யா 2003



                                                                 அம்மா சொல்லித்தான் எல்லோருக்குமே அப்பாவை தெரியும். அதுவே பதின்ம வயதில் ஒருவரை இவர்தான் அப்பா என அம்மா அறிமுகப்படுத்தினால்....... ...?
                            அப்படி பன்னிரண்டு வருடங்களின்பின் வீடு வந்துசேரும் அப்பாவுடனான இரு சிறுவர்களின் அநுபவமும் அதன் விளைவுகளுமே தி ரிட்டர்ன்.....
                     பதின்ம வயதுச்சிறுவன் இவானுக்கும் அவன் அண்ணனுக்கும் அப்பா என்பது வெறும் சொல்லாய் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது.
                      வெகு உயரத்திலிருந்து நீரில் குதித்து விளையாடும் சி்றுவர்களிடையே குதிக்கப்பயப்படும் இவான் கேலிப்பொருளாகிறான். விளையாடுமிடத்தில் இவானை கேலி செய்யும் அவன் அண்ணன் ஆந்த்ரேயிற்கும் இவானுக்குமிடையில் சண்டை வருகிறது. ஒருவரை ஒருவர் துரத்திச்சென்று அன்னையிடம் முறையிடுகின்றனர். இருவரும் அமைதியாயிருங்கள் அப்பா  உறங்கக்கொண்டிருக்கிறார் என்கிறார் அன்னை. இருவருக்கும் ஆச்சரியம். அவர்களுக்கு தந்தையை நேரில் சந்த்தித்த ஞாபகமே இல்லை. உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மனிதரை ஆச்சரியமாகப்பார்த்து விட்டு பழைய ஆல்பத்திலிருக்கும் போட்டோவை பார்த்து உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.
                   மறுநாள் ஆந்த்ரேவயும் இவானையும் தந்தை தனியே வெளியே கூட்டிச்செல்கிறார்.  ஆந்த்ரேவப்போல் அல்லாது இவானுக்கு தந்தை மேல் அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. ஆந்த்ரேயிடம் அடிக்கடி சந்தேகங்களை எழுப்புகிறான். தந்தயிடமும் அடிக்கடி முரண்படுகிறான்.
                    திருட்டுச்சிறுவர்களிடையே பணத்தை பறிகொடுக்கும் ஆந்த்ரேயையும் இவானையும் தந்தையார் கண்டிக்கிறார். தனக்கு திடீர் வேலையிருப்பதாய் சொல்லி இருவரையும் பஸ் ஏற்றிவிடுகிறார். பின் மனம்மாறி அவர்களை கூட்டிச்செல்கிறார். ஒரு ஏரிஅருகே முகாமிடுகின்றனர். சிறுவர்களிருவரும் மகிழ்ச்சியாக மீன் பிடிக்கின்றனர். இரவு இவான் மீண்டும் சந்தேகம் எழுப்புகிறான். மறுநாள் மேலும் மீன் பிடிப்போமென கூறி உறங்குகின்றனர். மறுநாள் தந்தை அவசரமாக முகாமை காலிசெய்துவிட்டு புறப்படச்சொல்கிறார். காரில் செல்லும் வழியில் இவான் மறுநாளும் தன்னை மீன்பிடிக்க அநுமதிக்காததையிட்டு தந்தயிடம் முரண்படுகிறான். கோபம்கொள்ளும் அவர் அவனை பாதியிலேயே இறக்கி விட்டுவிடுகிறார்.

                              
                                       மழையில் வெறுப்புடனும் கண்ணீருடனும் உட்கார்ந்திருக்கும் இவானை மீண்டும் வந்து கூட்டிச்செல்கிறார். இவ்வளவு நாட்கள் கழித்து நீங்கள் திரும்பி வந்தது இப்படிக் கொடுமைப்படுத்தவா என்று இவான் சண்டையிடுகிறான்.
                         மறுநாள் ஒரு கடற்கரையோரம் வந்துசேரும் மூவரும் அங்கிருக்கும் ஒரு படகினை செப்பனிடுகின்றனர்.பின் அதிலேறி தீவொன்றினை நோக்கிச்செல்கின்றனர். இயந்திம் பழுதடையும்போது இவானையும் ஆந்த்ரேயையும் துடுப்பு வலிக்கச்சொல்கிறார். பலசாலியான நீங்கள் துடுப்பு வலிக்கலாமேயென இவான் வாதம் செய்கிறான்.
                        தீவினை அடையும் மூவரும் உணவு உண்கின்றனர். பாத்திரங்களை இவானை கழுவப்பணிக்கின்றார் தந்தை.  கரையோரம் வெறுப்போடு பாத்திரம் கழுவும் இவான் பாத்திரத்தை கடலில் வீசுகிறான். திரும்பிவரும் தந்தையிடம் அலை இழுத்துச்சென்ற்விட்டதாகக் கூறுகின்றான்.
                        தீவினுள் செல்லும் தந்தை பழைய வீடொன்றினுள் நிலத்தை தோண்டி ஒரு பெட்டியை எடுத்துவந்து படகினுள் மறைக்கின்றார். அதே வீட்டின் கிடங்கிலிருந்து புழுக்களை எடுக்கும் இவானும் ஆந்த்ரேயும் மீன்பிடிக்கப் புறப்படுகின்றனர் . வீடுதிரும்ப நேரமாகிவிட்டதாக கூறும்  தந்தை ஒரு மணி நேரத்தில் திரும்பச்சொல்லி கைக்கடிகாரத்தை கொடுக்கிறார்.மீன்களேதும் கிடைக்காமலே நேரமாகிவிட்டதைஉணர்ந்து திரும்ப எத்தனிக்கிறான் ஆந்த்ரே. இவானோ இன்னும் சற்றுத்தூரம் சென்றால் நல்ல மீன்கள் பிடிக்கலாம் என்று வற்புறுத்தி அழைத்துச்செல்கிறான். நேரத்துக்கு கரை திரும்பமுடியாததால் என்னவாயிற்று என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே சுவாரசியமானது..ஆரம்ப காட்சியில் தோன்றும் தாயாரைதவிர்த்து இம் மூவரை வைத்தே அழகாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் Andrei Zvyagintsev.
                    சில தமிழ்படங்களைப் பார்க்கும்போது முடிவு அப்படியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்..,இப்படியிருந்திதால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றும். ஆனால் ரசிகனுக்கு இருப்பதை ரசிக்க மட்டுமே விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் உலகப்படங்களில் ரசிகனுக்கும்  திரைக்கதையினுள்  மானசீகமாக நுழைய  இடமிருக்கும். பன்னிரண்டு வருடங்களாய் எங்கேயிருந்தார்  அந்த தந்தை...?அவர் மறைத்துவைத்த பெட்டியில் என்ன இருந்தது...?.... போன்ற கேள்விகளுக்கு ரசிகனே தனக்குப்பிடித்த மாதிரி திரைக்கதை எழுதலாம்.
                    மூன்று நடிகர்களும் மிகநல்ல தேர்வு. அதிலும் இவானின் இயல்பான நடிப்பு அற்புதம்.. ரஸ்யா என்றால்  இனிமேல் இவானும் நிச்சயம் என் நினைவில் வருவான்.
               வெனிஸ் திரைப்படவிழா உட்பட பல விருதுகளைப்பெற்ற  இப்படத்தின் டிரையிலர்...
 
பிற்குறிப்பு - இது விமர்சனமல்ல. உலகத்திரைப்படங்களை விமர்சிக்குமளவிற்கு எனக்கு தகுதியிருக்கிறதோ என்பதும் தெரியவில்லை...ஆனாலும் நல்ல திரைப்படங்களை ரசிப்பதற்கு இந்த வலையுலகமே எனக்கு கற்றுக்கொடுத்தது. நான் ரசித்த நல்ல திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இங்கு எழுதுகிறேன். ஏதாவது  தவறிருந்தால் மன்னிக்கவும்... நன்றி..!

Friday 18 February 2011

தீவிர கிரிக்கெட் வெறியர்களுக்காக....

         எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பமாகப்போகின்றன. நானும்கூட ஏதோ ஓர் நம்பிக்கையில் கட்டண தொலைக்காட்சியின் இணைப்பை பெற்றுவிட்டு காத்திருக்கிறேன். ஆனாலும் சில நாட்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சியில் பார்த்த இந்த விவரணப்படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது. வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.






Monday 14 February 2011

வாழ்வை நேசிக்க வைத்தவளே...!



            

வாழ்வை
நேசிக்க வைத்தவளே...!
நீ
அழும்போது என்னை
அழகாக்குகிறாய்..
ஆத்திரப்படும்போது என்னை
அறிவாளியாக்குகிறாய்..
அன்பு காட்டும்போது மட்டும்
அடிமையாக்குகிறாய்.
யாதுமாகி நின்றவளே..!
என் அன்பை உரைக்க
கவிதை தேடி
களைத்துப்போய்விட்டேன்..
இந்த
வார்த்தைக் குப்பைகளுக்காக
வருந்துகிறேன்..


.

Saturday 5 February 2011

டோக்கியோ சொனாடா

  
                                         TOKYO SONATA
                 Tokyo Sonata (Tokyo Sonata)
                     
வெளிநாட்டு நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஆசியாவை நோக்கி தம் துணை அலுவலகங்களை நகர்த்தும்போது, இந்தியா போன்ற நாடுகளில்வேலைவாய்ப்புக்கள் குவிவதும், பொருளாதாரம் வளர்வதும் எல்லோரும் அறிந்ததே. ஆனால் இதன் எதிரொலியாக அந்த நாடுகளில் வேலை இழப்புக்கள் ஏற்படுவதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அவ்வளவாக யாரும் அறியாத விடயம். இப்படியாக வேலை இழப்பினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதையை அழகாக கூறுகிறது  ஜப்பானிய மொழித்திரைப்படமான   TOKYO SONATA.
                        
                 அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி நகருவதைப்போல ஜப்பானிய நிருவனங்கள் சிக்கன நடவடிக்கையாக சைனாவை நோக்கி நகருகின்றன. அப்படியான ஒரு அலுவலகத்தில் பணிபுரியும்  நடுத்தர வர்க்க  றியுகி சசாகி திடீரென வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். அதை வீட்டில் தெரிவிக்க அச்சப்படும் அவர், கல்யாணப்பரிசு தங்கவேலு  ஸ்டைலில் காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அலைகிறார். நகர மத்தியிலுள்ள பூங்காவில் வேலையற்றோருக்கு வழங்கப்படும் இலவச உணவை உண்டு பொழுதை கழிக்கிறார்.
             அங்கு அவர் சந்திக்கும் பள்ளிக்கால நண்பர் குருசோ, வேலையின்மையை குடும்பத்தினருக்கு மறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். அவரும்கூட வேலையிழந்தவர்தான். றியுகி சசாகியை சக அலுவலக ஊழியர் போன்று, வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து தன்  குடும்பத்தினரை  நம்பவைக்க நாடகம் ஆடுகிறார் குருசோ. ஆனால் நிலமை கைமீறிப்போக மனைவியுடன் தற்கொலை செய்கிறார்.
                      Tokyo Sonata (Tokyo Sonata)
       
       
             எதிகாலம் பற்றிய பயத்தில்  பாரிய மன உளைச்சலுக்குளாகிறார் றியுகி.அமைதியான குடும்பத்தில் புயல் வீச ஆரம்பிக்கிறது. பியானோ பழக விரும்பும் இளைய மகனுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். பாடசாலை மதிய உணவுக்கான பணத்தில் வீட்டிற்கு தெரியாமல் பியானோ பழக ஆரம்பிக்கிறான் இளையமகன். அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பும் மூத்தமகனுடனும் முரண்படுகிறார். ஆனால் அவன் பிடிவாதம் ஜெயிக்கிறது. மனைவி மெகுமியையும் வெறுமை சூழ்கிறது. ஒரு கட்டத்தில் மகன்கூட மெகுமியை தந்தையை விட்டு பிரிந்து செல்லுமாறு சொல்கிறான்.
   

              Tokyo Sonata (Tokyo Sonata)

                  அலுவலக வேலையிலிருந்த றியூகிக்கு சொப்பிங் காம்ப்ளெக்ஸில்
துப்பரவுப்ப்ணியாளராகவே வேலை கிடைக்கிறது. வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொள்கிறார். வீட்டிலிருந்து கோட்டுசூட்டுடன் கிளம்பும் றியூகி, வேலையிடத்தில் துப்பரவுப்பணியுடைக்கு மாறுகிறார். வேலை முடிந்ததும் மீண்டும் கோட்டுசூட்டு. அங்கு பணிபுரியும் வேறு சிலரும் அவரைப்போலவே.....

                         இளைய மகனின் பியானோ டீச்சர் அவனை இசைக்கல்லூரியில் சேர தூண்டுகிறார்.தானே பெற்றோரிடம் பேசி அநுமதி  வாங்குவதாககூறும் மகன் அதனையும் பெற்றோரிடம் மறைத்து விடுகிறான். இசைக்கல்லூரியிலிருந்து வரும்  நுளைவு அநுமதிப்பத்திரத்தினால் வீட்டில் உண்மை தெரியவர, றியூகி ஆத்திரத்தில்  மகனை  அடித்து விடுகிறார். மகன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

                      துப்பரவுப்பணி செய்யும்போது யாரோ தவறவிட்ட பணம் நிறைந்த கவர் கிடைக்கிறது றியூகிக்கு. பதற்றத்துடன் அதை எடுத்து ஒழித்துக்கொள்கிறார்.

                       வீட்டில் நுளையும் ஒரு திருடன் றியூகியின் மனைவி  மெகுமி்யை பணயக்கைதியாக கடத்திச்செல்கிறான். செல்லும் வழியில் றியூகியை துப்பரவுபணியுடையில் காணும் மெகுமி. ஏமாற்றமும் வெறுப்பும் அடைகிறாள். குடும்ப பாரங்களிலிருந்து விட்டுவிடுதலையாகிவிடத்துடிக்கும் அவள் திருடனுடனேயே செல்கிறாள். செல்லும் வழி முடிவடையுமிடத்தில் ஒரு கடற்கரை குடிலில் மெகுமியுடன் உறவுகொள்கிறான் திருடன். முதலில்மறுக்கும் மெகுமி பின்னர் இணங்குகிறாள். 

                     மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட றியூகி, மனைவிமுன்னால் நாடகம் கலைந்த அதிர்ச்சியிலும் அவமானத்திலும் குறுகிப்போய், கால்போனபோக்கில் ஓடி ஒரு வாகனம்மோதி விபத்துக்குள்ளாகிறான்.
          
                     வீட்டைவிட்டுவெளியேறிய மகன் காவல் துறையிடம் சிக்குகிறான். அமெரிக்க ராணுவத்தில் இணைந்த மகனும் மத்தியகிழக்குப் போரைக்கண்டு ஏமாற்றமடைகிறான்.

                    இவர்கள் ஒன்றிணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

                     முதலில் பிசியாக காட்டிக்கொள்ளும் நண்பர் பின் இலவச உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே தானும் வேலையின்றியிருப்பதை சொல்வது வேடிக்கை.
                     நண்பரின் வீட்டில் நடிக்கப்போன இடத்தில் நண்பரின் மகள் உங்களுக்கும் கஸ்டமாக இருக்குமில்லையா என்று கேட்பதும், றியூகி  அயர்ச்சியுடன் வீடுவரை வந்து விட்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்ச்சிரிப்புடன் வீட்டுக்குள் நுளைவதும் ரசிக்கவைக்கிறது.
                    மகனுடைய இசை ஆர்வத்தை பழுதடைந்த கீபோர்டில் இசை நோட்ஸ் வாசிப்பதில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
                    பொருளாதாரச்சங்கிலி அறுந்து போகும்போது குடும்ப உறவுகள் சிதறுண்டு போனாலும் அன்பு, பாசம் எனும் மெல்லிய உள்ளுணர்வுகள்தான் உண்மையிலேயே குடும்பத்தை இறுகக்கட்டி வைத்திருப்பதை உணர்த்துகிறது படம்.
                    திகில்கதை இயக்குனராக அறியப்பட்ட கியோஸி குரொசோவா (அகிரோ குரொசோவாவின் உறவினரல்ல) தற்போதைய ஜப்பானின் பொருளாதாரத்தளம்பலையும், அதனால் பாதிக்கப்படும் தனி மனித உறவுகளையும் அழகாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.
     
Title             : Tokyo Sonata
Year            : 2008
Director       :Kiyoshi Kurosawa
Written        :Kiyosi Kurosawa, Max Mannix, Sachiko Tanaka
Cast            :Teruyuki Kagawa, Kyoko Koizimi, Yu Koyanagi, Kai Inowaki, Kanji Tsuda
Running time: 2 hr.  1 min.
   
        இத்திரைப்படத்தின் ட்ரெயிலர்...

                   

  டிஸ்கி :  உங்களின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு ஓட்டும் என்னை மேலும் உற்சாகமாக எழுதுவதற்கு ஊட்டமளிக்கும





                               

Saturday 29 January 2011

1999

                    

  கொளுந்துவிட்டெரிந்த இனவாத அடக்குமுறையின் முன் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு மேலைத்தேயங்களுக்கு ஓடிப்போன புலம்பெயர் ஈழத்து இளம்சமுதாயம் இழந்துபோனது சொந்த மண்ணையும் சொந்தங்களையும்  மட்டுமல்ல. நம் கலாச்சார விழுமியங்களையும்தான்.
                          
                    இப்படி புலம்பெயர்ந்து வன்முறையின் வடுக்களோடு வாழும் இளைய சமுதாயத்தப்பற்றிபேசுகிறது  1999.புலம்பெயர் தமிழர்களின் ஒரு முழுமையான திரைப்படைப்பு.

                   சிறுவயது போர்ச்சூழலின் மனப்பாதிப்பு, மேலைத்தேயத்தின் கலாச்சாரத்தாக்கம், உறவுகளின் அரவணைப்பின்மை எல்லாம் ஒரு பகுதி இளைஞர்களை வன்முறைக்கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறது.அன்புகாட்ட உறவுகளில்லாதமயால் எல்லாமே நண்பர்கள் என்றாகிப்போய் அவர்களுக்காக எதையும் செய்யத்துணிகிறது.பொருளாதாரச்சுதந்திரம், போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குகிறது.மயக்கும் போதைப்பொருட்களின் செயற்கை உணர்ச்சியூட்டல், ஏராளமான நண்பர்கள் கூட இருக்கும் தைரியம் எல்லாமே சிறு உரசல்களை தீப்பொறியாக்குகின்றன.சிறு பிரச்சனைகளும் பெரும் குழுச்சண்டைகளாக மாற்றமடைகின்றன.இப்படியான ஒருகுழுவின் சில இளைஞர்களைப்பற்றியதுதான் 1999.

   
                  ஒரு நள்ளிரவில் சில இளைஞர்களுக்குள் ஏற்படும்   வாய்த்தகராறில் ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான்..கொலைசெய்யப்பட்டவன் டொரோண்டோவின் வெஸ்ட்போய்ஸ் எனப்படும் பிரபலமான குழுவின் தலைவன் மரநாய்  என்பவனின் தம்பி. கொன்றவன் இன்னொரு குழுத்தலைவன் குமாரின் தம்பி.
                 
                   பின் குமாரின் குழுவைச்சேர்ந்த அன்பு என்பவனின் பார்வையில் கதை ஆரம்பமாகிறது.  இனவாதஅழிப்பில் தாயைப்பறிகொடுத்த,தந்தையின் அரவணைப்பும் சரவர கிடைக்கப்பெறாத அன்பு நண்பர்களுடன்கூடி அதை மறக்கிறான்.தந்தையிடம் கோபித்துக்கொண்டு செல்லும் அன்பு வழியில் பழைய பள்ளி நண்பன்  அகிலனை  சந்திக்கிறான். இருவருக்கும் இப்போது உறவு அவ்வளவு நன்றாக இல்லை. காரணம் பள்ளித்தோழி கீதாவின்மீது இருவருக்குமே ஏற்படும் இன்னமும் வெளிப்படுத்தப்படாத காதல்.
     
                 அகிலனின் பார்வயிலான காட்சிகள் ஆரம்பமாகிறது.பெற்றோரை இழந்த அகிலன் தாத்தாவுடன் வசிக்கும் பல்கலைக்கழக மாணவன்.சமூகசேவைவில் நாட்டமுடையவன்.விடுமுறை நாட்களில்  வன்னியில் அல்லலுறும் அநாதக்குழந்தைகளுக்காக நிதிதிரட்டும் பணியிலீடுபடுகிறான் . வன்னியில் தான் ஆரம்பிதிருக்கும் அநாதைக்குழந்தைகளுக்கான பணியை விரிவு படுத்துவதும் கீதாவை மணமுடிப்பதுவுமே அவன் கனவு.  கீதாவின் பிறந்ததினமான நாளை அவளிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கிறான்.

   


                  இப்போது குழுத்தலைவன் குமாரின் பார்வையில் படம் தொடங்குகிறது. இனவாதப்போரிலே பெற்றோரை கண்முன்னே பறிகொடுத்து, தம்பி நிமலனுடன் கஸ்டப்பட்டு கனடா வந்து சேர்ந்தவன் குமார். அவனுக்கு தம்பிமேல் உயிர்.  பள்ளியிலே தம்பியை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு, அவனை திருப்பி அடித்துவிட்டுவந்தபின்னர்தான் அவன் வெஸ்ட்போய்ஸ் குழுவை சேர்ந்தவனென்பது தெரியவருகிறது. மிகப்பலமான வெஸ்ட்போய்ஸ் குழுவைச்செர்ந்தவனையே அடித்துவிட்டதால் குமாரின்பின்னும் சிலர்சேர இவனும் ஒரு குழுத்தலைவனாகிவிட்டான்.

                 கோஸ்டிமோதல்கள் உச்சமடைந்தவேளையின் சமூகப்பெரியவர்கள் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தியிருந்தனர். மரநாயின் தம்பியை  நிமலன் கொன்றதனால் நிமலனுக்கு மரநாய்மூலம் ஆபத்து என்று அஞ்சுகிறான்.போலீசும் கைது செய்யலாம் எனும் சூழ்நிலை,

                    தொடர்ந்து அன்பு,அகிலன், குமார் ஆகியோரின் பார்வையூடாக மாறி மாறி காட்சிகள் தொடர்கிறது.

                 தன்னுடைய ஒரே சொந்தமான தம்பி நிமலனை காப்பாற்றத்துடிக்கிறான் குமார். இன்னொரு சகாவான மொட்டையின் ஆலோசனைப்படி இந்தக்கொலையில் அன்புவை சிக்க வைக்கிறான்.

                  அகிலனின் கனவுகள் என்னவானது.....?
               
                  அன்பு கொலைப்பழியிலிருது தப்பித்தானா.....?

                  குமாரால் தம்பியை காப்பாற்ற முடிந்ததா......?

                             இவைதான் மீதிக்கதை. குழுமோதல்களுக்குள் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்களின் கதையை விபரித்திருக்கிறார்கள்.

                           மாறிமாறி மூவரின் பார்வைகளிலிருந்து கதை கூறப்பட்டாலும், எந்தவித சிக்கலுமில்லாமல்  புரியும்படியாக தெளிவான திரைக்கதைக்கு முதலில் பாராட்டுக்கள்.  பகுதி நேரமாக திரைப்படக்கலையை பயின்ற இயக்குனர் லெனின் M சிவம் அழகாக இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே a few good people, strenth, next door  போன்ற குறும்படங்களை இயக்கியதாக தெரிகிறது.  இவரது  a few good people,  independent art film society யின்  சிறந்த குறும்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.மேலும் இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

                      அன்புவாக நடிக்கும் சுதன் மஹாலிங்கமும், குமாராக நடிக்கும் திலீபன்சோமசேகரமும் நல்ல தேர்வு. அகிலனின் தாத்தாவாக ஈழத்தின் பழம்பெரும் கலைஞர் அண்ணே ரைட் புகழ் K.S. பாலச்சந்திரன் சில காட்சிகளில் தோன்றியுள்ளார். மற்றைய நடிகர்களும் கொடுத்த பணியினை செவ்வனே செய்துள்ளனர். திருப்திகரமான ஒளிப்பதிவு. ஒரே காட்சியை ஒவ்வொருவரின் பார்வையில் காட்டும்போதும், வேறுவேறு கோணத்தில் காட்சியமைத்தது அருமை.

                         வான்கூவர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த 10 கனடிய  திரைப்படங்களுக்குள் ஒன்றாக தேர்வுபெற்றிருக்கும்  இத்திரைப்படம் வேறு சில திரைப்படவிழாக்களிலும் தேர்வுபெற்றிருக்கிறது.

                             இத்திரைப்படத்தை எல்லோரையும் ஆதரிப்பதானது, புலம்பெயர் தமிழ்திரைப்படத்துறையை வளர்க்க உறுதுணைபுரியும்.