Friday 9 December 2011

தி ரிட்டர்ன் - ரஸ்யா 2003



                                                                 அம்மா சொல்லித்தான் எல்லோருக்குமே அப்பாவை தெரியும். அதுவே பதின்ம வயதில் ஒருவரை இவர்தான் அப்பா என அம்மா அறிமுகப்படுத்தினால்....... ...?
                            அப்படி பன்னிரண்டு வருடங்களின்பின் வீடு வந்துசேரும் அப்பாவுடனான இரு சிறுவர்களின் அநுபவமும் அதன் விளைவுகளுமே தி ரிட்டர்ன்.....
                     பதின்ம வயதுச்சிறுவன் இவானுக்கும் அவன் அண்ணனுக்கும் அப்பா என்பது வெறும் சொல்லாய் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது.
                      வெகு உயரத்திலிருந்து நீரில் குதித்து விளையாடும் சி்றுவர்களிடையே குதிக்கப்பயப்படும் இவான் கேலிப்பொருளாகிறான். விளையாடுமிடத்தில் இவானை கேலி செய்யும் அவன் அண்ணன் ஆந்த்ரேயிற்கும் இவானுக்குமிடையில் சண்டை வருகிறது. ஒருவரை ஒருவர் துரத்திச்சென்று அன்னையிடம் முறையிடுகின்றனர். இருவரும் அமைதியாயிருங்கள் அப்பா  உறங்கக்கொண்டிருக்கிறார் என்கிறார் அன்னை. இருவருக்கும் ஆச்சரியம். அவர்களுக்கு தந்தையை நேரில் சந்த்தித்த ஞாபகமே இல்லை. உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மனிதரை ஆச்சரியமாகப்பார்த்து விட்டு பழைய ஆல்பத்திலிருக்கும் போட்டோவை பார்த்து உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.
                   மறுநாள் ஆந்த்ரேவயும் இவானையும் தந்தை தனியே வெளியே கூட்டிச்செல்கிறார்.  ஆந்த்ரேவப்போல் அல்லாது இவானுக்கு தந்தை மேல் அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. ஆந்த்ரேயிடம் அடிக்கடி சந்தேகங்களை எழுப்புகிறான். தந்தயிடமும் அடிக்கடி முரண்படுகிறான்.
                    திருட்டுச்சிறுவர்களிடையே பணத்தை பறிகொடுக்கும் ஆந்த்ரேயையும் இவானையும் தந்தையார் கண்டிக்கிறார். தனக்கு திடீர் வேலையிருப்பதாய் சொல்லி இருவரையும் பஸ் ஏற்றிவிடுகிறார். பின் மனம்மாறி அவர்களை கூட்டிச்செல்கிறார். ஒரு ஏரிஅருகே முகாமிடுகின்றனர். சிறுவர்களிருவரும் மகிழ்ச்சியாக மீன் பிடிக்கின்றனர். இரவு இவான் மீண்டும் சந்தேகம் எழுப்புகிறான். மறுநாள் மேலும் மீன் பிடிப்போமென கூறி உறங்குகின்றனர். மறுநாள் தந்தை அவசரமாக முகாமை காலிசெய்துவிட்டு புறப்படச்சொல்கிறார். காரில் செல்லும் வழியில் இவான் மறுநாளும் தன்னை மீன்பிடிக்க அநுமதிக்காததையிட்டு தந்தயிடம் முரண்படுகிறான். கோபம்கொள்ளும் அவர் அவனை பாதியிலேயே இறக்கி விட்டுவிடுகிறார்.

                              
                                       மழையில் வெறுப்புடனும் கண்ணீருடனும் உட்கார்ந்திருக்கும் இவானை மீண்டும் வந்து கூட்டிச்செல்கிறார். இவ்வளவு நாட்கள் கழித்து நீங்கள் திரும்பி வந்தது இப்படிக் கொடுமைப்படுத்தவா என்று இவான் சண்டையிடுகிறான்.
                         மறுநாள் ஒரு கடற்கரையோரம் வந்துசேரும் மூவரும் அங்கிருக்கும் ஒரு படகினை செப்பனிடுகின்றனர்.பின் அதிலேறி தீவொன்றினை நோக்கிச்செல்கின்றனர். இயந்திம் பழுதடையும்போது இவானையும் ஆந்த்ரேயையும் துடுப்பு வலிக்கச்சொல்கிறார். பலசாலியான நீங்கள் துடுப்பு வலிக்கலாமேயென இவான் வாதம் செய்கிறான்.
                        தீவினை அடையும் மூவரும் உணவு உண்கின்றனர். பாத்திரங்களை இவானை கழுவப்பணிக்கின்றார் தந்தை.  கரையோரம் வெறுப்போடு பாத்திரம் கழுவும் இவான் பாத்திரத்தை கடலில் வீசுகிறான். திரும்பிவரும் தந்தையிடம் அலை இழுத்துச்சென்ற்விட்டதாகக் கூறுகின்றான்.
                        தீவினுள் செல்லும் தந்தை பழைய வீடொன்றினுள் நிலத்தை தோண்டி ஒரு பெட்டியை எடுத்துவந்து படகினுள் மறைக்கின்றார். அதே வீட்டின் கிடங்கிலிருந்து புழுக்களை எடுக்கும் இவானும் ஆந்த்ரேயும் மீன்பிடிக்கப் புறப்படுகின்றனர் . வீடுதிரும்ப நேரமாகிவிட்டதாக கூறும்  தந்தை ஒரு மணி நேரத்தில் திரும்பச்சொல்லி கைக்கடிகாரத்தை கொடுக்கிறார்.மீன்களேதும் கிடைக்காமலே நேரமாகிவிட்டதைஉணர்ந்து திரும்ப எத்தனிக்கிறான் ஆந்த்ரே. இவானோ இன்னும் சற்றுத்தூரம் சென்றால் நல்ல மீன்கள் பிடிக்கலாம் என்று வற்புறுத்தி அழைத்துச்செல்கிறான். நேரத்துக்கு கரை திரும்பமுடியாததால் என்னவாயிற்று என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே சுவாரசியமானது..ஆரம்ப காட்சியில் தோன்றும் தாயாரைதவிர்த்து இம் மூவரை வைத்தே அழகாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் Andrei Zvyagintsev.
                    சில தமிழ்படங்களைப் பார்க்கும்போது முடிவு அப்படியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்..,இப்படியிருந்திதால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றும். ஆனால் ரசிகனுக்கு இருப்பதை ரசிக்க மட்டுமே விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் உலகப்படங்களில் ரசிகனுக்கும்  திரைக்கதையினுள்  மானசீகமாக நுழைய  இடமிருக்கும். பன்னிரண்டு வருடங்களாய் எங்கேயிருந்தார்  அந்த தந்தை...?அவர் மறைத்துவைத்த பெட்டியில் என்ன இருந்தது...?.... போன்ற கேள்விகளுக்கு ரசிகனே தனக்குப்பிடித்த மாதிரி திரைக்கதை எழுதலாம்.
                    மூன்று நடிகர்களும் மிகநல்ல தேர்வு. அதிலும் இவானின் இயல்பான நடிப்பு அற்புதம்.. ரஸ்யா என்றால்  இனிமேல் இவானும் நிச்சயம் என் நினைவில் வருவான்.
               வெனிஸ் திரைப்படவிழா உட்பட பல விருதுகளைப்பெற்ற  இப்படத்தின் டிரையிலர்...
 
பிற்குறிப்பு - இது விமர்சனமல்ல. உலகத்திரைப்படங்களை விமர்சிக்குமளவிற்கு எனக்கு தகுதியிருக்கிறதோ என்பதும் தெரியவில்லை...ஆனாலும் நல்ல திரைப்படங்களை ரசிப்பதற்கு இந்த வலையுலகமே எனக்கு கற்றுக்கொடுத்தது. நான் ரசித்த நல்ல திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இங்கு எழுதுகிறேன். ஏதாவது  தவறிருந்தால் மன்னிக்கவும்... நன்றி..!

4 comments:

  1. இத்தனை நாட்களுக்கு பிறகு கமெண்ட் போடுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.இதுவரை தங்களை எப்படி தவறவிட்டேன் என்பதை எண்ணி வருந்துகிறேன்.
    நேற்றுதான் இந்த படத்தை பற்றி இணையத்தில் பார்த்து டவுன்லோட் லிங்கை எடுத்து வைத்தேன்.அதற்குள் தங்களது விமர்சனம் படத்தை பார்க்க மேலும் ஆர்வங்களை வளர்த்துவிட்டது.
    அருமையான விமர்சனம்.
    படத்தை பார்த்துவிட்டு மேலும் சொல்கிறேன்.
    தங்கள் எழுத்து வண்ணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகான விமர்சனம். படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.. ஆர்வத்தைத் தூண்டுகிறது... வாழ்த்துக்கள்..

    ReplyDelete