Saturday 4 December 2010

      
காதலெல்லாம்
கானலாகிப்போனபின்னே
கவிதையில்தன்னும்
தன்னைப்பாடாதே என்றவளே!
வண்ணத்துப்பூச்சியின் வாழ்த்துக்களென்ன
பூக்களை காயப்படுத்துமோ...?

Monday 8 November 2010

ஞாபகங்கள்

எல்லாமே முடிந்துபோயிற்று
இதுவரை உன் ரயிலில்
சக பயணியாகத்தானிருந்திருக்கிரேன்
உன் நிலையம் வந்ததும்
இறங்கிக்கொண்டுவிட்டாய்
உன் பாதை வேறாகிவிட்டது
இனி
எப்போதாவது உன் நினைவுகளில்
என் ஞாபகம் வந்துவிட்டு செல்லக்கூடும்
இல்லையேல்
நம் பயணகால சினேகிதத்திற்கு
உன் இறுதி அர்ப்பணிப்பாக
உன் பிள்ளையின் பெயராய்
என் ஞாபகம் உச்சரிக்கப்படலாம்
காலவேகத்தில் பெயரின்மூலம் மறந்துபோய்
உன் நேசனினைவுகள்
பழங்கனவாய் மாறலாம்
ஆனாலும்
என் ஜீவமூச்சுக்களில்
உன் நினைவுகள் சுவாசிக்கப்படும்
இதயத்துடிப்பெல்லாம்
உன் பெயரே உச்சரிக்கப்படும்
இறுதிவரை....
என் இறப்புவரை.

Sunday 17 October 2010

என் காதலை என்ன சொல்வேன் கண்மணி கண்மணி
என் இதயத்தை என்ன செய்தாய் பொன்மணி பொன்மணி
ஆயிரம் கனவுகள் தந்தவள் நீயடி
நான் வரும் பாதையில் பூத்திடும் பூச்செடி
                                                                                
கடலினில் வீழும் பனித்துளி யாவும்
சிப்பியை சேர்வதில்லை
அவை முத்துக்களாவதில்லை
காதலில் வீழும் இதயங்கள் யாவும்
மணவறை சேர்வதில்லை
அவை சந்தோஃசம் காண்பதில்லை
விதி போடும் கோடு வினையானது
பலர் வாழ்வில் இங்கு விளையாடுது

பாறையில் வீழ்ந்த ஓர் விதைபோல
தனிமையில் நான் இருந்தேன்
உன் பார்வையில் நான் மலர்ந்தேன்
நீ செல்லும் பாதை வேறானபின்னே
பிரிவினில் நான் தவித்தேன்
உயிர் இருந்துமே நான் இறந்தேன்
கண்ணீரில் நெஞ்சம் நீராடுதே
சோகங்கள் நாளும் உறவானதே

Sunday 10 October 2010

தங்கம் வென்ற தமிழன்

டெல்லி காமன் வெல்த் கேமில் தங்கம் வென்ற தமிழன்.

       தொங்கிப் போயிருக்கும் தமிழரின் தலைகள் இது போன்ற சில செய்திகளை கேட்கும்போதுதான் கொஞ்சமாவது நிமிர்கிறது.
   டெல்லியில் நடக்கும் காமன் வெல்த் கேம்(பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின்போது) ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவரும் ஜிம்னாஸ்டிக் வீரர் பிரசாந் செல்லத்துரை குழுப்போட்டியிலும் மற்றுமொரு போட்டியிலுமாக இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ஈழத்தமிழர்களான எங்களின் தலைகளை நிமிரச் செய்து பெருமிதங்கொள்ள வைத்த அவருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
  அதேபோல் அங்கு  தங்கம் வென்ற அனைத்து தமிழர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
                  ............                    ....................              ...................           ................
 

    தமிழருக்கு பெருமை சேர்க்கும் செய்திகளை மட்டுமே பதிவிடும் எண்ணத்தில் இங்கிருந்த இழிவு சேர்க்கும் செய்தியை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்..


              ................                    .....................                 .......................            ............................

                ........... செய்திகள் ஆதாரம்;manithan.com              ..............              ..............           ................

Sunday 26 September 2010

வெறும் மனிதனாக இருந்த என்னை
கவிஞனாக மாற்றிய
செப்படி வித்தைக்காரி
நீ
செய்வது நியாயமா...?
நான்
நிலவை நிராகரித்ததும்
தென்றலை வெறுத்ததும்
உன்னை பார்த்தபின்புதானே....
நிகழ்வுகளை மறந்து நான்
கனவுகளில் மிதந்ததும்
உன்னால்தானே....
இன்று என்னை
கவிஞனாகவே இருக்கவிட்டு
யாரோ ஒருவனை
காதலனாக மாற்றுவது
நியாயமா...?

Sunday 8 August 2010

காதலை நான் விரும்பியபோது
கவிதை பாடியிருக்கிறேன்
காதலே என்னை விரும்பியபோது
கவிதையை ரசிக்கமட்டுமே முடிகிறது

எந்தத்தென்றலாவது என்னை
தொட்டுப்பாடாதாவென்று
ஏங்கும் மூங்கிலாயிருந்தேன்
உன் உதட்டோரம் உட்காருவதாயின்
புல்லாங்குழலென்ன
அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே

எழுதச்சொல்லிக்கேட்டாய்
ஏதாவது கவிதை எழுதச்சொல்லிக்கேட்டாய்
உன்னையே எழுதினால்
வாசிப்பாயா பெண்ணே!

Sunday 18 July 2010

அழிந்துகொண்டிருக்கும் என் முகம்....
முகவரியில்லாத தேசத்தில் நான்
என் கனவுகள்
நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன
நான் நானாக இல்லை
என் சுயத்தின் அழிவு
எப்போது ஆரம்பமென்று
சரியாக தெரியவில்லைதான்
ஆனாலும் அது
என்
தோல்விகளில்தான் தொடங்கியது
அவளைப் பார்க்கும்வரை நான்
நானாகத்தான் இருந்தேன்
பார்த்தபின்னர்தான்
வேறாகிவிட்டேன்
அவளின் பார்வைகளில்தான்
என் பரிணாமவளர்ச்சியை
அறிந்து கொண்டேன்
ஆனால் அதுதான்
பரிதாபமாகவும் மாறிவிட்டது
நாம் அன்று
ஏதாவது பேசியிருந்தால்
நான் இன்று
பேசத்தேவையே இருந்திருக்காது
அன்றைய எம் மௌனம்தான்
இன்று என் புலம்பல்களை
அத்தியாயங்களுக்குள் அடங்காதவையாக்கிவிட்டது...

Thursday 8 July 2010

காத்திருக்கிறேன்....

மவுனத்தின் வெளிகளில்
அலைகிறது என் காதல்
உன்னிடம் கொண்டு சேர்க்க
எவருமில்லை
கொண்டுசேர்க்கப்படுவது
காதலுமில்லை
உன்னால் உணரப்படுவதற்கு
இன்னும் காலமிருப்பதால்
நான் காத்திருக்கிர்றேன்
காலத்தில் கரைகளில்....

Thursday 10 June 2010

எவ்வளவு காலமாயிற்று எழுதியென்று
பேப்பரும் பேனாவும்கூட பரிகசிக்கிறது
தமிழ் எழுத்துக்கள்கூட தட்டுத்தடுமாறித்தான் கைவரப்பெறுகிறது
இணையவழித்தளம் இசைய்ந்து வருவதால்
மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.
இப்போதைக்கு
சில பழைய பல்லவிகளோடு
கவி பாட வருகிரேன்.
சுருதிபேதம் இருப்பின்
மன்னிக்கவும்.
விரைவில்
மீண்டும் சந்திப்போம்.