Saturday, 15 January 2011

பணம் விளையாடும் விளையாட்டு...

                   அடுத்த தவணை பணவேட்டையில் இறங்கிவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அடுத்த மூண்றாண்டுகளுக்கான  IBL  அணிகளுக்கான வீரர்கள் ஏலம் விடப்பட்டிருக்கிறார்கள்.

                      இரவுபகல் பாராது வெறியோடு கிரிக்கெட் பார்த்தது ஒரு காலம். சென்னை சேப்பாக்கத்தில் ஒரேஒரு முறை மாமாவுடன் சென்று சர்வதேச கிரிகெட் பார்த்திருக்கிறேன். டிக்கெட் கிடைக்காமல் சுவரேறி குதித்து உள்ளே சென்றபோது சுவரில் பதித்திருந்த கண்ணாடி கையை கிழித்துவிட, ரத்தம் வழிந்தோடிய கையோடு கிரிக்கெட் பார்த்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது.

                    பின்னர்  இங்கிலாந்து வந்தபின் பணிச்சுமை காரணமாகவும் ,   விளையாட்டுக்களை  ஒளிபரப்பும்கட்டண
 தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கு  பணச்சுமை காரணமாகவும் கிரிக்கெட் பார்ப்பதில் இடைவெளி விழுந்துவிட்டது. பின் கிளம்பியது கிரிக்கெட் ஊழல் புகார், வீரர்கள் பணத்துக்காக பந்தயக்காரர்களின் எண்ணத்துக்கு ஆடுவதாக கூறப்பட்டது. நான் ரசித்த திறமையான கேப்டன்கள் குரேஞ்சே, அசாருதீன் போன்றோர் கு்ற்றச்சாட்டு நிரூபணமானதில் கிரிக்கெட் உலகிலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர். பின்னர் ஒரு விமானவிபத்தில் குரெஞ்சே இறந்துபோனது இன்னொரு சோகம்.
               
                   இந்த இடைவெளியும் ஊழல்புகாரும் கிரிக்கெட் மீதான நாட்டத்தை வெகுவாக குறைத்துவிட்டது. இப்போதெல்லாம் கிரிக்கெட்டை முழுமையாக உட்கார்ந்து ரசிக்க முடிவதில்லை.  இதற்கு இன்னொரு காரணம் ஒரு நாளின் பாதிநேரத்தையும் கிரிக்கெட் விழுங்கிவிடுகிறது.ஆகவே ஸ்கோர்களை மட்டும் தெரிந்துகொள்வதோடு சரி.
          இருபதிற்கு இருபது அறிமுகப்படுத்தப்பட்டபின், சில மணி நேரத்தில் முடிந்துவிட்டதால் சிறிது ஆர்வமாகப் பார்க்க முடிகிறது.
          
           IBL   ஏலத்தில் கௌதம்காம்பீர் அதிகபட்சமாக 11.04 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார்.ரோஹித்சர்மா 9.2 கோடிக்கும், இர்பான்பதான் 8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் 8.28 கோடிக்கும் ஏலம் போயிருக்கிறார்கள். கங்குலி, க்ரிஸ்கெய்ல், லாரா, சனத் ஜெயசூர்யா போன்ற பழம்பெரும் தலைகளை ஏலம் எடுக்க யாருமில்லை. அதே நேரம் புதிய வீரர்கள் சிலர் ஆர்வமாக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

            கடந்த உலகக்கோப்பைத் தொடரில மோசமான   தோல்வியைத் தழுவிய இந்திய அணி  மிக முன்னைய சுற்றுக்களிலேயே வெளியேற, புதிய இளம்வீரர்களை  வளர்த்தெடுக்கும்  நோக்கில் ZEE தொலைக்காட்சியுடன் கபில்தேவ் இணைந்து உருவாக்கியது இந்தியன் கிரிக்கெட் லீக் எனப்படும் ICL .  பணத்தை கொட்டிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் இதுவென்று கண்டுகொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் போட்டியாக IBL  ஐ அறிமுகப்படுத்தியதும், தன்  அதிகாரபலத்தால் சர்வதேச வீரர்களை  ICL  இல் விளையாட விடாமல் தடுத்ததும் யாவரும் அறிந்தவிடயம். மீறி விளையாடிய சில வீரர்கள் சர்வதேச போட்டிகளீல் விளையாட தடை விதிக்கப்பட்டது. இறுதியில்,  இளம் வீரர்களை உருவாக்கவென்று  ஏற்படுத்தப்பட்ட ஒரு போட்டி, சில வீரர்களின் சர்வதேச விளையாட்டுக்கு ஆப்பாக மாறியது.    ஆனால்   இந்திய கிரிகெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கோடிகளை கொட்டிக்கொடுதுக்கொண்டுள்ளது. இப்போது IBL  நிர்வாகத்துறையிலும் ஊழல்புகார், விசாரணை என்றிருக்கும் நிலையில்,  கிரிக்கெட் என்றாலே பணம்தான் எங்கேயும் விளையாடுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

1 comment:

  1. எனக்கும் இதே நிலமைதான், நபர்களுடன் விவதித்தபடி கிறிக்கற் பார்பது, சண்டைபோடுவதில் ஒரு திரில் இருந்தது இப்போதேல்லம் வெறும் ஸ்கோரினை பார்த்துவிட்டு எங்களை நாங்களே ஆசுவசபடுத்திக் கொள்ளலாம்.

    ReplyDelete