Sunday, 26 September 2010

வெறும் மனிதனாக இருந்த என்னை
கவிஞனாக மாற்றிய
செப்படி வித்தைக்காரி
நீ
செய்வது நியாயமா...?
நான்
நிலவை நிராகரித்ததும்
தென்றலை வெறுத்ததும்
உன்னை பார்த்தபின்புதானே....
நிகழ்வுகளை மறந்து நான்
கனவுகளில் மிதந்ததும்
உன்னால்தானே....
இன்று என்னை
கவிஞனாகவே இருக்கவிட்டு
யாரோ ஒருவனை
காதலனாக மாற்றுவது
நியாயமா...?

Sunday, 8 August 2010

காதலை நான் விரும்பியபோது
கவிதை பாடியிருக்கிறேன்
காதலே என்னை விரும்பியபோது
கவிதையை ரசிக்கமட்டுமே முடிகிறது

எந்தத்தென்றலாவது என்னை
தொட்டுப்பாடாதாவென்று
ஏங்கும் மூங்கிலாயிருந்தேன்
உன் உதட்டோரம் உட்காருவதாயின்
புல்லாங்குழலென்ன
அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே

எழுதச்சொல்லிக்கேட்டாய்
ஏதாவது கவிதை எழுதச்சொல்லிக்கேட்டாய்
உன்னையே எழுதினால்
வாசிப்பாயா பெண்ணே!

Sunday, 18 July 2010

அழிந்துகொண்டிருக்கும் என் முகம்....
முகவரியில்லாத தேசத்தில் நான்
என் கனவுகள்
நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன
நான் நானாக இல்லை
என் சுயத்தின் அழிவு
எப்போது ஆரம்பமென்று
சரியாக தெரியவில்லைதான்
ஆனாலும் அது
என்
தோல்விகளில்தான் தொடங்கியது
அவளைப் பார்க்கும்வரை நான்
நானாகத்தான் இருந்தேன்
பார்த்தபின்னர்தான்
வேறாகிவிட்டேன்
அவளின் பார்வைகளில்தான்
என் பரிணாமவளர்ச்சியை
அறிந்து கொண்டேன்
ஆனால் அதுதான்
பரிதாபமாகவும் மாறிவிட்டது
நாம் அன்று
ஏதாவது பேசியிருந்தால்
நான் இன்று
பேசத்தேவையே இருந்திருக்காது
அன்றைய எம் மௌனம்தான்
இன்று என் புலம்பல்களை
அத்தியாயங்களுக்குள் அடங்காதவையாக்கிவிட்டது...

Thursday, 8 July 2010

காத்திருக்கிறேன்....

மவுனத்தின் வெளிகளில்
அலைகிறது என் காதல்
உன்னிடம் கொண்டு சேர்க்க
எவருமில்லை
கொண்டுசேர்க்கப்படுவது
காதலுமில்லை
உன்னால் உணரப்படுவதற்கு
இன்னும் காலமிருப்பதால்
நான் காத்திருக்கிர்றேன்
காலத்தில் கரைகளில்....

Thursday, 10 June 2010

எவ்வளவு காலமாயிற்று எழுதியென்று
பேப்பரும் பேனாவும்கூட பரிகசிக்கிறது
தமிழ் எழுத்துக்கள்கூட தட்டுத்தடுமாறித்தான் கைவரப்பெறுகிறது
இணையவழித்தளம் இசைய்ந்து வருவதால்
மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.
இப்போதைக்கு
சில பழைய பல்லவிகளோடு
கவி பாட வருகிரேன்.
சுருதிபேதம் இருப்பின்
மன்னிக்கவும்.
விரைவில்
மீண்டும் சந்திப்போம்.